அதிமுக எம்எல்ஏக்கள் ராஜிநாமா வழக்கில் நாளை தீர்ப்பு
அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜிநாமா வழக்கில் இன்று தீர்ப்பு - உயர் நீதிமன்றம்
ஒரு எம்.எல்.ஏ. ராஜிநாமா செய்ய விரும்பினால், பதவியில் நீடிக்கும்படி நிர்பந்திக்க முடியாது என சபாநாயகர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
Published : October 12, 2026 at 8:27 PM IST
Updated : October 13, 2026 at 7:14 AM IST
சென்னை: அதிமுகவை சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (அக்.13) தீர்ப்பளிக்கிறது.
தவெக அரசுக்கான நம்பிக்கை வாக்கெடுப்பில், கொறடா உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக கடந்த சட்டப் பேரவை தேர்தலில் வென்ற அதிமுகவை சேர்ந்த எம்எல்ஏக்கள் மரகரம் குமரவேல், சத்தியபாமா, இசக்கி சுப்பையா, ஜெயக்குமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஆறு பேர் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக சார்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது.
இந்த தகுதி நீக்க கோரிக்கை நிலுவையில் இருக்கும் போதே, அவர்கள் தங்களின் சட்டமன்ற பதவியை ராஜிநாமா செய்தனர். தகுதி நீக்க கோரிக்கை நிலுவையில் இருக்கும் போது, எந்த அடிப்படையில் எம்எல்ஏக்களின் ராஜிநாமாவை சபாநாயகர் ஏற்றார்? என அதிமுக கேள்வி எழுப்பியது.
இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக சார்பில் அக்கட்சியின் கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் ரவி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது.
அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில், "இந்த வழக்கில் சபாநாயகர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ராஜிநாமா செய்தவர்களிடம் சுயமாக பதவி விலகினார்களா? என விசாரணை நடத்தி திருப்தியடைந்த பின் ஏற்றுக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அர்த்தமுள்ள எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை.
ராஜிநாமா கடிதங்களை அளித்த சில நிமிடங்களில், தலைமைச் செயலகத்தில் அமைச்சரை சந்தித்து தவெகவில் இணைந்திருக்கின்றனர். ஆனால் இது சம்பந்தமாக சபாநாயகர் முழுமையான விசாரணை நடத்தாமல், ராஜிநாமாவை ஏற்றுக் கொண்டுள்ளார். ராஜிநாமாவை ஏற்கும் முன், தகுதி நீக்க புகார் அளித்த மனுதாரரான அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு எந்த நோட்டீசும் அனுப்பப்படவில்லை. குதிரை பேரம் நடந்துள்ளது குறித்து ஆளுநருக்கும் புகார் அளிக்கப்பட்டது" எனச் சுட்டிக்காட்டப்பட்டது.
சபாநாயகர் தரப்பில், "ராஜிநாமா ஏற்றுக் கொண்டதால், தகுதி நீக்க நடவடிக்கை இல்லாமல் ஆகி விடாது. ராஜிநாமாவை ஏற்றது சட்டப்படி செல்லுபடியானது தான். ஒரு எம்.எல்.ஏ. ராஜிநாமா செய்ய விரும்பினால், பதவியில் நீடிக்கும்படி நிர்பந்திக்க முடியாது. உறுப்பினர்களின் ராஜிநாமாவை ஏற்காவிட்டால் அது அரசியல் சாசன கடமையை செய்யத் தவறியதாகி விடும்.
சுய விருப்பப்படி ராஜிநாமா செய்தாரா? என்பதை மட்டும் தான் விசாரிக்க முடியும். அமைச்சர் பதவி, பணத்துக்காக ராஜிநாமா செய்தார்களா? குதிரை பேரம் நடந்ததா? என்பதை தகுதி நீக்க நடவடிக்கையில் தான் விசாரிக்க முடியும். ராஜிநாமாவின் நோக்கம் என்ன என்பதை, ராஜிநாமாவை ஏற்கும் போது விசாரிக்க முடியாது. சபாநாயகர் எந்த விதிமீறலும் செய்யவில்லை. இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும்" என வாதிடப்பட்டது.
ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் தரப்பில், "எம்.எல்.ஏ.வாக இருந்து சலுகைகளை பெற்றுக் கொண்டு வேறு கட்சிக்கு ஆதரவளித்தால் தான் ஊழல் நடவடிக்கை. எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்து விட்டு, வேறு கட்சிக்கு இணைவது, ஜனநாயக அரசியல். எம்.எல்.ஏ.வின் ராஜிநாமாவை ஏற்றுக் கொண்டதால், தகுதி நீக்க நடவடிக்கையை தன்னிச்சையாக செல்லாததாக்கி விடாது. எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா உண்மையானவை; சுய விருப்பப்படி அளிக்கப்பட்டவை.
நேரில் சந்தித்து, கைப்பட எழுதி அளித்த ராஜிநாமா கடிதத்தின் உண்மைத்தன்மையை சந்தேகிக்க முடியாது. எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமாவை தொகுதி மக்கள் தான் கேள்வி கேட்க முடியும்" என வாதிடப்பட்டது.
சட்டப் பேரவை செயலாளர் தரப்பில், "உண்மையாக, சுய விருப்பத்தின் அடிப்படையில் எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகல் கடிதம் அளித்தால், அதை சபாநாயகர் ஏற்காமல் இருக்க முடியாது" எனத் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தனர். இந்த நிலையில், இன்று (அக்.13) காலை இந்த வழகத்கில் தீர்ப்பளிக்கப்பட உள்ளது.