போலி விளம்பரங்களால் சிங்கப்பூரில் $1.4 மில்லியன் இழப்பு
சமூக ஊடகங்களில் இடம்பெறும் போலி விளம்பரங்களை நம்பி ஏமாந்த 246 பேர், ஜூலை மாதம் முதல் $1.4 மில்லியனுக்கும் மேல் இழந்துள்ளதாகக் காவல்துறை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 2) தெரிவித்துள்ளது.
உணவு, ஆடை, வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்கள் குறைந்த விலையில் கிடைப்பதாகச் சமூக ஊடகங்களில் வரும் விளம்பரங்களுக்கு உள்ளே செல்லும்போது, பாதிக்கப்பட்டவர்கள் போலி இணையப்பக்கங்களுக்கு இட்டுச்செல்லப்படுகின்றனர்.
அங்கு அவர்களின் வங்கி அட்டை விவரங்கள், இணைய வங்கிப் பயனர் தகவல்கள் கோரப்படுகின்றன. சிலர் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் கடவுச்சொல் (ஓடிபி) அல்லது மின்னிலக்க மறைச்சொல்லை வழங்கிப் பரிவர்த்தனையை உறுதிசெய்துள்ளனர். தங்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து அனுமதி பெறாத பணப் பரிவர்த்தனைகள் நடந்த பிறகே, தாங்கள் ஏமாற்றப்பட்டதை அவர்கள் உணர்கின்றனர்.
இத்தகைய சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பாதுகாப்பு அம்சங்களைச் சேர்ப்பது, அறிகுறிகளைச் சரிபார்ப்பது, அதிகாரிகளிடம் தெரிவிப்பது எனும் விழிப்புணர்வு நடைமுறையைப் பின்பற்றுமாறு காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்த மேல் விவரங்களை www.scamshield.gov.sg என்ற இணையத்தளத்தில் காணலாம் அல்லது 1799 எனும் 24 மணி நேர உதவித் தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.
சிங்கப்பூரில் 2019ஆம் ஆண்டு முதல் மோசடிகளால் $4 பில்லியனுக்கும் மேல் இழக்கப்பட்டுள்ளது. எனினும், 2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் மோசடிகளால் ஏற்பட்ட இழப்பு ஆண்டு அடிப்படையில் $410.6 மில்லியனாகக் குறைந்துள்ளது. இது 2025ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தில் $500.2 மில்லியனாக இருந்தது. மோசடி வழக்குகளின் எண்ணிக்கையும் 14 விழுக்காடுவரை குறைந்துள்ளது.