சென்னை விமான நிலைய விரிவாக்க பணிகள் துவங்கியது! 3 கிராமங்களில் நிலத்தை கையகப்படுத்துது அரசு
- நமது நிருபர் -
பரந்துாரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டுள்ள தமிழக அரசு, சென்னை விமான நிலைய விரிவாக்க பணிகளில் தனி கவனம் செலுத்தி வருகிறது. விரிவாக்கத்திற்காக, மணப்பாக்கம், கொளப்பாக்கம், கவுல்பஜார் ஆகிய மூன்று கிராமங்களில், 217 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகளை, வருவாய் துறை முடுக்கி விட்டுள்ளது.
சென்னை, மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில், பயணியர் மற்றும் சரக்கு போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எதிர்கால தேவைக்கேற்ப விமான நிலையத்தை மேம்படுத்த வேண்டியது அவசியம்.
சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதைவிட, சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை, காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில் அமைக்க கடந்த தி.மு.க., தலைமையிலான அரசு முடிவு செய்தது.
பொது - தனியார் கூட்டு முயற்சியில், 5,600 ஏக்கர் பரப்பரளவில் அமைக்க திட்டமிட்டு, அதற்கான நிர்வாக அனுமதி, 2023 அக்டோபரில் தமிழக அரசு வழங்கியது. விமான நிலையம் அமைக்க தேவையான நிலங்களில், 3,700 ஏக்கர் அங்குள்ள நில உரிமையாளர்கள், விவசாயிகள், கிராம மக்களிடம் இருந்து கையகப்படுத்தும் பணிகளில், 'டிட்கோ' எனும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மேற்கொண்டது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, த.வெ.க., ஆட்சி அமைந்த நிலையில், பரந்துார் திட்டத்தை கைவிடுவதாக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு அறிவித்தது. இதற்கு தேவைப்படும் நிலங்களை கையகப்படுத்த பல்வேறு கட்ட ஆலோசனை நடந்து வருகிறது.
பரந்துார் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டதால், அதற்காக நியமிக்கப்பட்ட டி.ஆர்.ஓ.,க்கள் வேறு பணிக்கு மாற்றப்பட்டனர். இதையடுத்து, சென்னை விமான நிலைய விரிவாக்கத்திற்கான நிலம் எடுக்கும் பணிகளுக்கு, டி.ஆர்.ஓ., உள்ளிட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆலந்துார் தாலுகா அலுவலகத்தில், இதற்கான அலுவலகம் செயல்படும் என, தெரியவந்துள்ளது. இதையடுத்து, விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் எடுக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன.
இதுகுறித்து, வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்காக, மணப்பாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், தரப்பாக்கம் ஆகிய கிராமங்களில், 1,069.99 ஏக்கர் நிலம் கையகப்படுத்த, 2007ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. இந்திய விமான நிலையங்கள் ஆணையம், இந்த நிலங்களை பயன்படுத்த முன்வரவில்லை. இதையடுத்து, இந்த நான்கு கிராமங்களில் கையகப்படுத்த திட்டமிட்டதில், 852.88 ஏக்கர் நிலங்கள், 2011ல் விடுவிக்கப்பட்டன. மீதமுள்ள, 217 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் நடந்து வந்தன.
தற்போதைய நிலவரப்படி, மணப்பாக்கம், கொளப்பாக்கம், கவுல்பஜார் கிராமங்களில் நிலம் கையகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். நிலம் கையகப்படுத்தும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன. விமான நிலைய விரிவாக்கத்துக்கு, புதிதாக நிலம் தேர்வு செய்வது, கையகப்படுத்துவது தொடர்பாக, அரசு உத்தரவுக்காக காத்திருக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.