📅 Sunday, 04 October 2026 IST | புரட்டாசி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health October 04, 2026 11:00 AM

பொன்விழா கண்ட உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்

பொன்விழா கண்ட உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்

உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவி அருஞ்செல்வி, 60, தற்போது பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் துணைத் தலைவியாகக் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் பணியாற்றி வருகிறார்.

அவரைப் போலவே, முன்னாள் மாணவர்களில் பலரும் சங்கத்தில் முக்கியப் பங்காற்றி வருகின்றனர்.

சிங்கப்பூரின் ஒரே தமிழ் உயர்நிலைப்பள்ளி என்ற பெருமையையும் பெற்ற இப்பள்ளி, 1946ல் உமறுப்புலவர் தமிழ்ப் பள்ளியாகத் தொடங்கப்பட்டது. அது 1982ல் மூடப்பட்டது.

இருப்பினும், அதன் முன்னாள் மாணவர் சங்கத்தின் பொன்விழா ஆண்டைப் பிரம்மாண்டமான முறையில் கொண்டாட பல முன்னாள் மாணவர்கள் தோ பாயோ சாஃப்ரா மன்றத்தில் சனிக்கிழமை (செப்டம்பர் 26) கூடினர்.

பொன்விழா ஆண்டை மெருகூட்ட, முன்னாள் மாணவர்களின் பிள்ளைகள், தங்கள் பெற்றோரின் பணிகளைப் பொறுப்பேற்கவுள்ளதாக அருஞ்செல்வி தெரிவித்தார்.

“அடுத்த தலைமுறை இப்போது நாம் விட்டுவைத்த பொறுப்புகளைத் தொடர்வது மிகவும் உற்சாகமளிக்கிறது,” என்றார் அவர்.

அருஞ்செல்விக்கு பள்ளியுடன் இருந்த நீண்டகாலத் தொடர்பு, சங்கத்தில் சேர உந்துதலாக அமைந்தது என்று கூறினார் அவருடைய மகள் பு.சந்தியா, 31.

“துணைத் தலைவியாக அவரது பொறுப்புகளுக்கு உதவ நான் முன்வந்ததிலிருந்து எங்களது பிணைப்பும் மேலும் வலுப்பெற்றுள்ளது,” என்றும் அவர் கூறினார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

சங்கம் வழிநடத்தும் நிகழ்ச்சிகளும் நடவடிக்கைகளும் கலாசாரத்துக்கும் தமிழுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன என்றும் அவர் கூறினார்.

“இளையர்களாகிய நாம், நமது கலாசாரத்திலும் மொழியிலும் தொடர்ந்து ஆழ்ந்து ஈடுபட்டிருப்பது மிகவும் முக்கியம்,” என்று வலியுறுத்தினார்.

பொன்விழா ஆண்டை முன்னிட்டு ஒரு சிறப்பு வரலாற்று மலர் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

பள்ளியின் வரலாறு, அரிய புகைப்படங்கள், முன்னாள் மாணவர்களின் நினைவுகள், அனுபவங்கள், சாதனைகள், கட்டுரைகள் உள்ளிட்டவை நூலில் இடம்பெற்றுள்ளன.

வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹமீது ரசாக் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

இரண்டாவது முறையாக ‘நட்பின் கலைவிழா’ கொண்டாட்டங்களுக்கு வருகையளித்த டாக்டர் ஹமீது, “உமறுப்புலவர் உயர்நிலைப்பள்ளி இன்றும் இருக்கிறது. நிலத்தில் அல்ல, அனைவரின் அகத்தில் இருக்கிறது,” என்று பாராட்டினார்.

உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் தமிழ் இலக்கியம் பயின்ற அவர், அந்த நிலையத்துக்கு உமறுப்புலவர் என்ற பெயர் சூட்டிய பெருமை, முன்னாள் மாணவர்களையே சேரும் என்றார்.

பழைய நினைவுகளைத் தூண்டும் சிறப்புக் காணொளிகள், ஆடல், பாடல் மேடைநிகழ்ச்சிகள், நினைவுப் பகிர்வுகள், விளையாட்டுகள், இரவு உணவு விருந்து முதலியவையும் இடம்பெற்றன.

சங்கத்தின் வருங்கால முன்னெடுப்புகளில் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்க முற்படப் போவதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.குணசேகரன் தெரிவித்தார்.

“அடுத்த தலைமுறையிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது,” என்றார் அவர்.

ஸ்ரீ நாராயண மிஷனிலிருந்து முதியோர் சிலரும் விழாவில் கலந்துகொண்டது நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பம்சம்.

பள்ளியின் பெயர் கட்டடத்திலிருந்து மறைந்திருந்தாலும், அது சிங்கப்பூர் வரலாற்றில் நிரந்தரமாகப் பதிந்துள்ளது என்றார் சங்கத் தலைவர் ரஹ்மத்துல்லாஹ் எம்.எஸ்.ஷேக் தாவூத்.

“நமது பாரம்பரியப் பயணத்தைத் தலைமுறை தலைமுறையாகத் தொடர உதவுங்கள்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.