பார்வைக்குறைபாடு உள்ளோருக்கான பேருந்து கருவி
சிங்கப்பூரில் பார்வைக் குறைபாடு உள்ளோர்கள் பேருந்துகளில் பயணம் செய்ய உதவுவதற்கான கழுத்தில் அணியும் கருவியை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக (என்டியு) மாணவர்கள் வடிவமைத்து மேம்படுத்தி வருகின்றனர்.
பேருந்தின் வருகையைக் கண்டறிந்து அதனைப் பார்வைக்குறைபாடு உள்ளோர்க்கு அறிவிக்கும் அந்தத் திறன் சாதனத்தை 22 வயதான திரு லீ கியா ஹோங் என்ற என்டியு மாணவர் தமது மூன்று நண்பர்களுடன் வடிவமைத்து சோதனைகள் மேற்கொண்டு வருகிறார்.
அந்தக் கருவியின் முன்மாதிரி வடிவம் ‘ஐஃபோன்’ வகையில் இயங்கும் ‘ஓகியுலிஸ்’ எனப்படும் கைப்பேசி செயலியில் அவர்கள் மேம்படுத்திவரும் செயல்முறையை அடிப்படையாகக் கொண்டது.
அந்த ஐஃபோன் செயலி கணினியின் திறனைக் கொண்டு பஸ் எண்களை அடையாளம் கண்டு, அதனை ஒருவர் கேட்கும் அளவுக்கு உரக்க அறிவிக்கிறது. தனிமையில் பயணம் செய்வோருக்கு அது மிகவும் உதவியாக அமையும்.
திரு லீயின் குழுவில் உள்ள முழுநேர தேசியச் சேவையாளர்கள் திரு ரையன் இயோ 21, திரு ஸ்ரீராம் ஜெயகுமார் 21, திரு சியா வீ லியோங் 22, ஆகியோர் ஐஃபோன் செயலியை மேம்படுத்த எண்ணி அதனைக் கழுத்தில் அணியக்கூடிய பதக்கம் போன்று வடிவமைத்துள்ளனர்.
அதில் தனிப்பட்ட வகையில் கேமராக்களுடன் உணர்கருவிகளும் (சென்ஸர்) பொருத்தப்படும். சிங்கப்பூரில் சேவையாற்றும் பேருந்துகளின் பயணப்பாதையை பார்வைக் குறைபாடு உள்ளோர் மேம்பட்ட முறையில் பயன்படுத்திக்கொள்ள அவை உதவும்.
சிங்கப்பூர் பலதுறைதொழிற் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு, பகுப்பாய்வுத் துறையில் பயிலும்போது அக்குழுவினர் ஒருவரை ஒருவர் சந்தித்து நண்பர்களாயினர்.
அரசாங்கத் தொழில்நுட்ப முகவையின்கீழ் (GovTech) தன்னிச்சையாக இயங்கும் வெளிப்படையான அரசாங்கத் திட்டங்களை வடிவமைக்கும் பிரிவான ‘நன்மைக்கான உருவாக்க முன்னெடுப்பின்’ அங்கமாக இத்திட்டத்தை 2025ல் அவர்கள் தொடங்கினர்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
நிலப் போக்குவரத்து ஆணையம் (எல்டிஏ) வழங்கும் நிகழ்நேரப் பேருந்து வருகை நேரத் தரவுகளைப் பயன்படுத்தி இத் தொழில்நுட்பம் இயங்குகிறது.
பேருந்து ஒரு நிமிடத் தொலைவில் இருக்கும்போது இச் சாதனம் பயனர்களுக்கு அறிவிப்பு ஒலிகளை எழுப்பும்.
பார்வைத் திறன் குறைபாடுள்ள 40க்கும் மேற்பட்டோரிடம் நடந்த சோதனைகளில், அவர்கள் ஒரு கையில் ஊன்றுகோலைப் பிடிப்பதால், கைகளைப் பயன்படுத்தாமல் உடலில் அணியக்கூடிய சாதனத்தையே விரும்புவதாகத் தெரியவந்தது.
அதனால் கழுத்தில் அணியக்கூடிய வகையிலும் கண்ணாடி வடிவங்களிலும் மாதிரிச் சாதனங்களை இக் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
பெருமளவில் உற்பத்தி செய்யப்படும்போது இச் சாதனத்தின் விலை $30 முதல் $40 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.