பானக் கலன்கள்: விற்பனைக்கு கூடுதல் அவகாசம்
பத்துக் காசு சின்னம் இல்லாத பானங்களை விற்று முடிக்க சிறிய சில்லறை விற்பனையாளர்கள் ஒரு மாத கால நீட்டிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் (என்இஏ) வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) அன்று தெரிவித்தது.
பானக் கலன்களைத் திரும்பப் பெறும் திட்டத்தின்கீழ் (பிசிஆர்எஸ்), அக்டோபர் 1 முதல் 150 மில்லி லிட்டர் முதல் 3 லிட்டர் வரையிலான கொள்ளளவு கொண்ட அனைத்து பிளாஸ்டிக் போத்தல்கள், கேன்களில் 10 காசு வைப்புத்தொகை சின்னம் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லையெனில் அவற்றை அக்டோபர் 1ஆம் தேதிக்குப் பிறகு விற்க முடியாது.
சின்னம் இல்லாத போத்தல்கள், கேன்களை விற்பனை செய்வது நிரூபிக்கப்பட்டால் $10,000 வரை அபராதம், அல்லது மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
“அக்டோபர் 1ஆம் தேதி இத்திட்டம் முழுமையாக அமலுக்கு வருவதால் அக்கம்பக்க குடியிருப்புகளில் உள்ள கடைகள், குடும்பத்தால் நடத்தப்படும் மளிகைக் கடைகள், சில சிறிய சில்லறை விற்பனைக் கடைகள் தற்போது கைவசம் வைத்துள்ள சின்னம் இல்லாத பானங்களை விற்றுத் தீர்க்க இன்னும் சிறிது அவகாசம் தேவைப்படலாம் என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்,” என்று என்இஏ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பானங்களின் இருப்பை விற்றுத் தீர்ப்பதில் உண்மையான சிரமங்களை எதிர்நோக்கும் அத்தகைய சில்லறை விற்பனையாளர்கள் அக்டோபர் 31 வரை அவகாசம் பெற செப்டம்பர் 30க்குள் என்இஏவிடம் பதிவு செய்யலாம்.
விண்ணப்பங்கள் ஒவ்வொன்றாகப் பரிசீலிக்கப்படும் என்று என்இஏ கூறியது.
லாபநோக்கற்ற அமைப்புகளும், நன்கொடையாகப் பெற்ற சின்னம் இல்லாத போத்தல், கேன்களை தங்களது பயனாளர்களுக்கு அக்டோபர் 31க்குள் விநியோகிக்க அனுமதிக்கப்படும். ஆனால் அதற்கும் செப்டம்பர் 30க்குள் என்இஏவிடம் அவை பதிவு செய்ய வேண்டும்.
உற்பத்தியாளர்களும் சில்லறை விற்பனையாளர்களும் பழைய, சின்னம் இல்லாத இருப்பை அக்டோபர் 1க்குள் விற்றுத் தீர்ப்பதற்கு ஏதுவாக ஆறு மாத காலத்திற்கு முன்பே ஏப்ரல் 1ஆம் தேதி பிசிஆர்எஸ் தொடங்கப்பட்டது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
ஏப்ரல் மாதத்தில் புதிய சின்னம் பொறிக்கப்பட்ட போத்தல்களும் கேன்களும் சந்தையில் அரிதாகவே கிடைத்தன. துறையினரிடமிருந்து பெற்ற கருத்துகளைத் தொடர்ந்து, தொடக்கத்தில் திட்டமிடப்பட்ட மூன்று மாத கால அவகாசம் ஆறு மாதங்களாக நீட்டிக்கப்பட்டது.