📅 Wednesday, 07 October 2026 IST | புரட்டாசி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 07, 2026 11:05 AM

நீதியில் தொண்டூழியர்களின் பங்கு: தலைமை நீதிபதி உரை

நீதியில் தொண்டூழியர்களின் பங்கு: தலைமை நீதிபதி உரை

நீதி வழங்கும் அமைப்பில் தொண்டூழியர்களின் பங்கு மகத்தானது என்று தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் தெரிவித்துள்ளார்.

நீதி நிர்வாகம் திறம்படச் செயல்படவும் அனைவருக்கும் நீதி எளிதில் கிடைக்கவும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மட்டுமின்றி தங்களின் நேரம், ஆற்றல், திறமைகளை அர்ப்பணிக்கும் தொண்டூழியர்களின் பரந்த சமூகமும் முக்கியக் காரணம் என்று அவர் கூறினார்.

புதன்கிழமை (அக்டோபர் 7) நடைபெற்ற நீதிமன்றத் தொண்டூழியர்களுக்கான பாராட்டு நிகழ்ச்சியில் நீதித்துறையில் அயராது சேவையாற்றிய ஐம்பது தொண்டூழியர்களுக்கு விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுச் சிறப்புரையாற்றிய தலைமை நீதிபதி, உரிமைகளும் தீர்வுகளும் மக்களுக்கு எட்டாத தூரத்தில் இருந்தால் அதனால் பயனில்லை என்றார்.

தொண்டூழியர்களின் சேவை நீதித்துறை அமைப்பை மேலும் அணுகக்கூடியதாகவும் மனிதநேயமிக்கதாகவும் மாற்றியுள்ளது என்றும் அவர் கூறினார்.

நீதித்துறையில் பணியாற்றுபவர்கள் தங்களின் மனநலன், உடல் நலனைப் பேணுவது மிக அவசியம் என்றும் மற்றவர்களுக்கு சேவை செய்யும் அதே வேளையில் தங்களின் நலன் சார்ந்த பராமரிப்புக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் திரு சுந்தரே‌‌ஷ் மேனன் கேட்டுக்கொண்டார்.

இரண்டு நூற்றாண்டுகளில் பல மாற்றங்கள் வந்தாலும் நேர்மை, பாரபட்சமின்மை, நாணயம் ஆகிய அடிப்படைக் கொள்கைகள் மாறவில்லை என்றும் தலைமுறை தலைமுறையாக மக்கள் அவற்றை நடைமுறைப்படுத்துவதால்தான் அவை நிலைத்து நிற்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாராட்டு நிகழ்ச்சியில் பத்து மற்றும் பதினைந்து ஆண்டுகள் தொடர் சேவை புரிந்த 43 தொண்டூழியர்களுக்கு நீண்டகாலச் சேவை விருதுகளும் மரணதண்டனை வழக்குகளில் இலவசச் சட்ட உதவி வழங்கும் அமைப்பில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றிய நான்கு வழக்கறிஞர்களுக்குச் சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

இவர்களுடன் சிக்கலான சட்ட விவகாரங்களில் நீதிமன்றத்திற்கு உதவ முதன்முறையாகத் தெரிவுசெய்யப்பட்ட 12 இளம் வழக்கறிஞர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நீதித்துறை 200 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில் அந்தச் சாதனையை நினைவுகூரும் வகையில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தொண்டூழியர்கள் அனைவருக்கும் சிங்கப்பூர் நீதித்துறையின் வரலாற்றுச் சிறப்புமிக்க நீதிமன்றக் கட்டடங்களின் படங்கள் பொறிக்கப்பட்ட சிறப்புப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.