📅 Wednesday, 07 October 2026 IST | புரட்டாசி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 07, 2026 04:04 AM

சிங்கப்பூர் கார்ப் பந்தயம்: சவால்களும் வாய்ப்புகளும்

சிங்கப்பூர் கார்ப் பந்தயம்: சவால்களும் வாய்ப்புகளும்

சிங்கப்பூரில் அக்டோபர் 9,10,11 ஆகிய தேதிகளில் ஃபார்முலா ஒன் கார்ப் பந்தயம் நடைபெறவுள்ளது.

சிங்கப்பூரின் இரவு நேரக் கார் பந்தயம் 2008ஆம் ஆண்டு தொடங்கியது.

இவ்வாண்டு 17வது முறையாக நடைபெறவுள்ளது.

இம்முறை பந்தயத்தை நடத்துவதில் உள்ள சவால்களையும் வாய்ப்புகளையும் தமிழ் முரசின் சிறப்பு வலையொளி மூலம் விளக்கினார் ‘சிங்கப்பூர் ஜிபி’யின் விருந்தோம்பல், விற்பனை, விளம்பரப் பிரிவுத் தலைவர் ‌‌‌ஷாமினி சுப்பையா.

“சிங்கப்பூர் கார்ப் பந்தயத்தை ஒரு சாதாரண கார்ப் பந்தயம் என்று சொல்லிக் கடந்துவிட முடியாது. அதற்குப் பின்னால் பலரின் உழைப்பு உள்ளது. மூன்று நாள் பந்தயத்திற்காக 300 நாள்களுக்கு மேல் உழைக்க வேண்டும். குறிப்பாக மே மாத இறுதியில் இருந்து வேலைகள் கடுமையாக இருக்கும். ‘பிட்’ கட்டடத்தைத் தவிர அனைத்தையும் முதலில் இருந்து உருவாக்க வேண்டும்,” என்று திருவாட்டி ஷாமினி கூறினார்.

“பந்தயத்தை நடத்துவதில் உள்ள முக்கியச் சவால் இட வசதி. சிறிய இடத்தைக் கொண்டு சிறப்பாகச் செய்ய வேண்டும். இந்த ஆண்டு 11 அணிகள் களமிறங்குகின்றன. கூடுதலாக ஓர் அணி வருகிறது என்று எளிதாகச் சொல்லிவிடலாம். அதற்காகப் பல திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். இல்லை என்றால் இடத்தை ஒதுக்குவதில் பல சிக்கல்கள் வரும்,” என்றார் அவர்.

பந்தயச் சாலையின் பயணம்

2007ஆம் ஆண்டு முதல் பந்தயச் சாலையை வடிவமைக்கத் திட்டமிடுவதால் அந்த அனுபவம் பெரிய உதவியாக உள்ளது என்று ‌‌‌திருவாட்டி ஷாமினி தெரிவித்தார்.

“ஒவ்வோர் ஆண்டும் ஒரு பாடமாக இருக்கும். ‘சிங்கப்பூர் ஜிபி’யில் கிட்டத்தட்ட 30 பேர்தான் முழுநேர ஊழியராக உள்ளோம். ஆனால் மே மாதத்திற்குப் பிறகு அதில் ஏறத்தாழ 30,000 பேர் பணி செய்வோம். சாலைப் பாதுகாப்புக் குறித்துத் தொடர்ந்து சோதனைகள் இருக்கும்,” என்று அவர் சொன்னார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

“ஒவ்வோர் ஆண்டும் பந்தயத்தை நடத்த ஃபார்முலா ஒன் குழுவுக்கு ஒரு பெரியதொகையைக் கொடுக்க வேண்டும். இதைச் செலவாகப் பார்க்காமல் வாய்ப்பாகப் பார்ப்போம். சிங்கப்பூரை உலக அளவில் கொண்டுசெல்ல இது அருமையான ஏற்பாடு.

“பந்தயத்தைக் காணப் பல நாடுகளிலிருந்து ரசிகர்கள் வருவார்கள். சுற்றுலாத் துறை, ஹோட்டல்கள், உணவு பானத் துறைகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பந்தயம் நடக்கும் வாரத்தில் பல மாநாடுகளும் நடக்கும். இதனால் சிங்கப்பூருக்குப் பல நிறுவனங்களின் தலைவர்களும் வருவார்கள்; முதலீடுகளும் கிடைக்கலாம்,” என்று திருவாட்டி ‌‌‌ஷாமினி குறிப்பிட்டார்.

“பந்தயத்தின்போது பல்வேறு இசை நிகழ்ச்சிகளும் நடக்கும். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள பலர் சிங்கப்பூருக்கு வருகின்றனர். பந்தயத்திற்கான நுழைவுச் சீட்டுகள் விரைவாக விற்று முடிந்துள்ளன. முடிந்தால் மீண்டும் சில நுழைவுச் சீட்டுகளை விற்போம் ,” என்றார் அவர்.

சிங்கப்பூர் கார்ப் பந்தயம் தொடர்பாக மேலும் பல சுவாரசியமான தகவல்களைத் தெரிந்துகொள்ளத் தமிழ் முரசின் யூடியூப் ஒளிவழியில் முழு வலையொளியையும் காணலாம்.