📅 Sunday, 27 September 2026 IST | புரட்டாசி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 27, 2026 01:03 PM

நேப்பாளர் துயர் துடைக்க சிங்கப்பூர் மனிதநேயம்

நேப்பாளர் துயர் துடைக்க சிங்கப்பூர் மனிதநேயம்

அண்மையில் பேரிடருக்குள்ளான நேப்பாள நாட்டின் துயர் துடைக்க, சிங்கப்பூரில் நூற்றுக்கணக்கானோர் ஒன்றிணைந்துள்ளனர்.

ஆகஸ்ட் 26ஆம் தேதி நிகழ்ந்த நேப்பாளப் பனிச்சரிவு, வெள்ளப் பேரழிவு ஏற்பட்டு ஒரு மாதம் ஆன நிலையில், அந்தப் பேரிடரில் பாதிக்கப்பட்டோரின் மறுவாழ்வு சார்ந்த பணிகளுக்காக நிதி திரட்டும் நிகழ்ச்சிக்கு ‘ஹியூமானிட்டி மேட்டர்ஸ்’ (எச்எம்) அறநிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 27) நடைபெற்ற அந்நிகழ்ச்சியில் பங்கேற்க ஆசியா, ஐரோப்பாவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டூழியர்கள் ஒன்றுகூடினர்.

கிட்டத்தட்ட 9 நாடுகளைச் சேர்ந்தோர், உள்ளூர்வாசிகள், வெளிநாட்டு ஊழியர்கள் எனப் பலதரப்பினர் பங்கேற்ற இந்த நிதி திரட்டும் இயக்கத்தை, ‘எச்எம்’ நிலையத்தில், முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சரும், தற்காப்பு மூத்த துணை அமைச்சருமான ஸாக்கி முகம்மது கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

கருணைக்கு எல்லையில்லை: அமைச்சர் ஸாக்கி

நிகழ்ச்சியில் பேசிய திரு ஸாக்கி, ‘‘நேப்பாளப் பெருவெள்ளம் நிகழ்ந்து ஒரு மாதம் ஆகிறது. பல உயிரிழப்புகள் நேர்ந்துள்ளன. குடும்பங்கள் இன்னும் அந்தப் பாதிப்பில் இருந்து மீளவில்லை. இந்நிலையில், சிங்கப்பூரில், எண்ணற்றோர் நேப்பாள மக்களுக்கு உதவ முன்வந்திருப்பது மனத்துக்கு நிறைவளிக்கிறது. இதுதான் செயல் வடிவம்பெறும் மனிதநேயம்,” என்றார்.

மேலும், ‘‘மற்றவர்களுக்குத் தேவை எனும்போது, தொலைவில் கடல் கடந்து இருந்தாலும்கூட நம்மால் முடிந்ததைச் செய்ய முன்வரும் உணர்வை இங்கே காண்கிறோம்.

‘‘சிங்கப்பூரர்கள், புலம்பெயர்ந்தோர், பல்வேறு சமயங்களையும் நாடுகளையும் சேர்ந்தவர்கள் என அனைவரும் ஒரே நோக்கத்திற்காக ஒன்றிணைந்துள்ளனர். கருணைக்கு நாடு, இனம், சமயம் போன்ற எல்லைகளில்லை. மற்றவர்களுக்காக நாம் விளக்கை ஏந்தும்போது, நம் பாதையும் ஒளிரும்,” என்று அவர் கூறினார்.

மேலும், இந்த உதவிப் பணியில் ஒன்றிணைந்துள்ள பள்ளிவாசல்கள், தேவாலயங்கள், கோயில்களில் இருந்து வந்த தொண்டூழியர்கள், தலா $50,000 வழங்கிய கத்தோலிக்க அமைப்பான காரிட்டாஸ் சிங்கப்பூர், திரு டொலென்டினோ மெண்டோன்சா ஆகியோர்க்குச் சிறப்பு நன்றி தெரிவித்தார் திரு ஸாக்கி.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

குளிர்காலத்திற்குள் மறுவாழ்வுத் திட்டம்

இமயமலைப் பகுதியில் குளிர்காலம் தொடங்குவதற்குள், பெற்றோர் அல்லது பராமரிப்பாளர்களை இழந்த குழந்தைகளுக்குப் புகலிடம் அமைத்துத் தருவது, தற்காலிக இருப்பிடங்கள், குடிநீர் வசதிகளைச் செய்துதருவது ஆகியவற்றுக்கு இந்த ஆதரவுத் திட்டம் முன்னுரிமை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக அக்டோபர் 31க்குள் $300,000 நிதி திரட்ட இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை பொதுமக்கள், இதர அமைப்புகளின் சார்பில் $160,000 திரட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்துப் பேசிய அறநிறுவன அமைப்பின் இயக்குநர் திலகா கோவிந்தசாமி, “இந்த நிதி திரட்டும் முயற்சி, பொதுமக்களிடம் ‘ஒரு நாடு, ஒரு மனிதநேயம்’, நன்றி, கருணை, உள்ளிட்ட பொதுவான விழுமியங்களை வலியுறுத்துகிறது,’’ என்றார்.