நாகர்கோவிலில் பிரபல யூடியூபர் வீட்டில் ரூ.1 கோடி கொள்ளை
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் சமூக ஊடகப் பிரபலமாக விளங்கும் மதுமிதா என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து, கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகள், ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
இன்ஸ்டகிராமில் 4.5 லட்சத்துக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ள மதுமிதா, தமது ஆடம்பர வாழ்க்கை முறையைத் தவறாமல் புகைப்படங்களாகவும் காணொளிகளாகவும் பதிவிட்டு வந்தார்.
கட்டுக்கட்டாகப் பணம், தங்கம், வைர நகைகளைத் தமது சமூக ஊடகப் பக்கங்களில் அவர் தொடர்ந்து காட்சிப்படுத்தி வந்ததால், இணையவாசிகளிடையே அவர் மிகவும் பிரபலமாக விளங்கினார்.
இந்நிலையில், தமது குடும்பத்தினருடன் மதுமிதா வியாழக்கிழமை வெளியூருக்குச் சென்றிருந்த வேளையில், நாகர்கோவிலில் உள்ள விஐபி கார்டன் பகுதியில் அமைந்த அவரது வீட்டிற்குள் அத்துமீறிப் புகுந்து 120 சவரன் தங்க நகைகள், விலைமதிப்பற்ற வைர நகைகள், ரூ. 50,000 ரொக்கம் உட்பட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
வீட்டிற்குத் திரும்பிய குடும்பத்தினர், காப்பகம் திறக்கப்பட்டுப் பொருள்கள் களவு போயிருந்ததைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தனர்.
தமது விலையுயர்ந்த பொருள்களைப் பாதுகாப்பது எவ்வாறு என்பது தமக்குத் தெளிவாகத் தெரியும் என்று மதுமிதா முன்னர் வெளியிட்ட காணொளி ஒன்றில் கூறியிருந்தார். ஒரு குழந்தையின் மேல் பணம் கொட்டுவது போன்ற காணொளியையும் அவர் பயன்படுத்தி இருந்தார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க ஐந்து சிறப்புத் தனிப்படைகளை அமைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.