📅 Friday, 11 September 2026 IST | ஆவணி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 11, 2026 04:33 AM

முதல்வர் விஜயின் பிரிட்டன் பயணம் ஏன்?: தமிழக அரசு விளக்கம்

முதல்வர் விஜயின் பிரிட்டன் பயணம் ஏன்?: தமிழக அரசு விளக்கம்

சென்னை: 'தொழில் உறவுகளை வலுப்படுத்துவதும், ஏற்கனவே உள்ள நிறுவனங்களின் செயல்பாடுகளை விரிவுப்படுத்துவதும், முதல்வர் விஜயின் பிரிட்டன் பயணத்தின் முக்கிய நோக்கங்கள்' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: த.வெ.க., அரசு பொறுப்பேற்று, 100 நாட்களான நிலையில், முதலீட்டாளர்கள் மாநாடு வாயிலாக, ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும், அதிகமான முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள், 8,491 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு திட்டங்களை முன்வைத்துள்ளன. அவற்றின் வாயிலாக, 5,690 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிட்டனை சேர்ந்த நிறுவனங்கள், நீண்ட காலமாகவே தமிழகத்தில், பொறியியல், நிதி சேவைகள் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில், குறிப்பிடத்தக்க அளவில் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பல நிறுவனங்கள், தமிழகத்தில் உற்பத்தி ஆலைகளையும், உலகளாவிய திறன் மையங்களையும் நிறுவி செயல்பட்டு வருகின்றன.

இத்தகைய உறவுகளை வலுப்படுத்துவதும், ஏற்கனவே உள்ள நிறுவனங்களின் செயல்பாடுகளை விரிவுப்படுத்துவதும், முதல்வர் விஜயின் பிரிட்டன் பயணத்தின் முக்கிய நோக்கங்களாகும். இதன் வாயிலாக, தமிழகத்தில் உயர்தர வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வாய்ப்புகள் ஏற்படும். மேலும், 'உலகத்தரம் வாய்ந்த, மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும்' என, முதல்வர் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை முன்னெடுத்து செல்லும் வகையில், உலகின் முன்னனி மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை, நேரில் பார்வையிட்டு, சிறந்த நடைமுறைகளை அறிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும். இதற்காக, 'சில்வர் ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்' போட்டியை, முதல்வர் பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக முதல்வர் விஜய் தலைமையிலான குழு, சென்னையில் இருந்து நேற்று புறப்பட்டது. இக்குழு 17ம் தேதி மீண்டும் சென்னை திரும்ப உள்ளது. இக்குழுவில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, தொழில்துறை வழிகாட்டி நிறுவன இயக்குனர் தீபக் ஜேக்கப் மற்றும் அரசு அலுவலர்கள் இடம் பெற்றுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.