முதல்வர் கோப்பை மாநில போட்டி :ஆதவ் ஆர்ஜுனா தொடங்கி வைப்பு
சென்னை: முதல்வர் கோப்பைக்கான மாநிலப் போட்டிகளை, விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 2026 – 27-ம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள், தமிழகம் முழுதும் நடந்தது. மாவட்ட போட்டிகள் நிறைவடைந்த நிலையில், மாநிலப் போட்டிகள் தொடக்க விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், நேற்று நடந்தது.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ஒலிம்பிக் தீபம் ஏற்றி நேற்று, போட்டிகளை தொடங்கி வைத்தார். பள்ளி, கல்லூரி மாணவ -மாணவியர், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என, ஐந்து பிரிவுகளில், 38 மாவட்டங்களில் வெற்றி பெற்று, தகுதி பெற்ற அணிகள், மாநிலப் போட்டிக்கு முன்னேறின.
விழாவில், உணவு மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன், உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன், நிதி, திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மரிய வில்சன் உட்பட, அரசியல் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விழாவில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:
முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க, 27 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில், 1.75 லட்சம் பேர் பதிவு செய்திருப்பது, கிராமப்புறங்களில் விளையாட்டின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளதை காட்டுகிறது. இளம் வீரர்களுக்கு தேவையான, அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தருவதே அரசின் நோக்கம். ஏழ்மை, பயிற்சி வசதியின்மை, விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதில் சிரமம் போன்ற தடைகளைத் தாண்டி, வீரர்கள் சாதிக்க வேண்டும்.
வரும் 2036 ஒலிம்பிக் போட்டியில், தமிழக வீரர்கள் பதக்கம் வெல்லும் வகையில், 8 வயது முதலே திறமையான வீரர்களைக் கண்டறிந்து, முறையான பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் விளையாட்டு விடுதிகளை விரிவுபடுத்தி, 30 ஆயிரம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வரும் 2028 ஆசிய விளையாட்டுப் போட்டி, 2032 மற்றும் 2036 ஒலிம்பிக் போட்டிகளை இலக்காக வைத்து, வீரர்களை தயார்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் சர்வதேச தரத்திலான பயிற்சி வசதிகளை உருவாக்கி, கிராமப்புற வீரர்களும், உலக அரங்கில் சாதிக்க வாய்ப்பளிப்பதே, இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.
இவ்வாறு, அவர் கூறினார்.