📅 Monday, 07 September 2026 IST | ஆவணி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 07, 2026 04:04 PM

முஸ்லிம் லீக்கிடம் குதிரை பேரம் நடத்தியது திமுக தான்; விசாரணை நடத்தப்படும் என்கிறார் அமைச்சர் ஆதவ்!

முஸ்லிம் லீக்கிடம் குதிரை பேரம் நடத்தியது திமுக தான்; விசாரணை நடத்தப்படும் என்கிறார் அமைச்சர் ஆதவ்!

சென்னை: 'திமுக எம்பி ஜெகத்ரட்சகனுடைய ஹோட்டலில் தான் ஐயூஎம்எல் எம்எல்ஏக்களை தங்கவைத்திருந்தனர். அங்கு தங்க வைத்தது யார் என்று விசாரணை நடத்தப்பட்டு, அதற்கு பின் யார் இருக்கிறார்கள் என வெளியிடப்படும்,' என்று அமைச்சர் ஆதவ் தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் அவர் பேசியதாவது; எங்கள் கூட்டணியில் உள்ள முஸ்லிம் லீக்கிடம் தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி சட்டசபைக்கு வெளியே கொடுத்த பேட்டியில் கூறியிருக்கிறார். ஆனால், ஒரு உரையில் பேசியதை திரித்து , தவெக மீது ஒரு பொய்யான குற்றச்சாட்டை அவர் பதிவு செய்துள்ளார்.

எங்களுக்கு வெற்றி கிடைத்தவுடன் மக்கள் தீர்ப்புக்கு தலைவணங்கி, காங்கிரஸ் தனக்கான ஆதரவு கடிதத்தை கொடுத்தது. கேரளாவில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் கூட்டணியில் முஸ்லிம் லீக் இடம்பெற்றுள்ளது. மதச்சார்பற்ற கொள்கையுடன் ஆட்சியமைக்க வேண்டும் என்ற கருத்துடன் கேரளாவில் அமைச்சரவையில் முஸ்லிம் பங்கெடுத்துக் கொண்டதுடன், கேரள முஸ்லிம் லீக் தலைவர்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம். அதன்பிறகு, தமிழகத்தில் உள்ள முஸ்லிம் லீக் கட்சி தலைவர்களுடன் நாங்கள் பேசினோம்.

அதன்பிறகு, விசிக, கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய தலைவர்களுடன் பேசினோம். எந்தவொரு தனிப்பட்ட எம்எல்ஏக்களிடம் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இந்த அரசு ஜனநாயக முறைப்படி, மக்கள் தீர்ப்பளித்ததை தலைவணங்கி, காங்கிரசும், முஸ்லிம் கட்சியும், விசிகவும், கம்யூனிஸ்ட் தோழர்களும், ஜனநாயகப் பார்வையுடன் இந்த ஆட்சியை அமைத்து உள்ளனர்.

முஸ்லிம் லீக்கின் இரு எம்எல்ஏக்களை ஹோட்டலில் யார் தங்க வைத்தார்கள்? இந்த ஹோட்டல் யாருடையது என்றால், திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமானது. அவர்களை தங்க வைத்து யார்? என்பது குறித்து கூடிய சீக்கிரம் விசாரணை நடத்தப்படும் என்பதை இங்கு பதிவு செய்கிறோம். அப்போது, அதன் பின்புலத்தில் யார் இருக்கிறார்கள் என்பது தெரிய வரும். திமுக தான் குதிரை பேரம் நடத்தியுள்ளது. இதை தான் நாங்கள் பதிவு செய்கிறோம், இவ்வாறு அவர் கூறினார்.