முகமது ஷமிக்கு சிறப்பு பரிசு அளித்த வைபவ் சூர்யவன்ஷி.. கடுமையாக உழைக்க வேண்டும் என அறிவுரை
முகமது ஷமிக்கு சிறப்பு பரிசு அளித்த வைபவ் சூர்யவன்ஷி.. கடுமையாக உழைக்க வேண்டும் என அறிவுரை
சென்னை: தனது 100-வது முதல்தர கிரிக்கெட் போட்டியை எட்டியுள்ள மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு, அவரது ஈஸ்ட் ஜோன் சக வீரரான 15 வயது வைபவ் சூர்யவன்ஷி, அனைத்து வீரர்களும் கையெழுத்திட்ட சிறப்பு ஜெர்சி ஒன்றை வழங்கி கௌரவித்தார்.
சென்னையில் நிறைவடைந்த துலீப் கோப்பை 2026 இறுதிப்போட்டியில், சவுத் ஜோன் அணிக்கு எதிரான முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் ஈஸ்ட் ஜோன் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வரலாற்று வெற்றிக்குப் பிறகு இந்த நெகிழ்ச்சியான தருணம் அரங்கேறியது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஈஸ்ட் ஜோன் அணி, கேப்டன் இஷான் கிஷனின் அதிரடி இரட்டை சதத்தின் உதவியுடன் 708 ரன்கள் என்ற இமாலய இலக்கைக் குவித்தது. இதற்குப் பதிலளித்த சவுத் ஜோன் அணி தனது முதல் இன்னிங்ஸில் 336 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஈஸ்ட் ஜோன் அணி, 99.2 ஓவர்களில் 388/7 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டத்தை 'டிக்ளேர்' செய்தது.
இதன் மூலம் ஆட்டம் டிராவில் முடிந்து, ஈஸ்ட் ஜோன் அணி கோப்பையைக் கைப்பற்றியது.வெற்றிக் கொண்டாட்டத்தின் போது, சூர்யவன்ஷி கையெழுத்திடப்பட்ட ஜெர்சியை ஷமியிடம் வழங்கியதோடு, அவரை உரையாற்றுமாறும் கேட்டுக்கொண்டார். அப்போது பேசிய ஷமி, "எனது நினைவுகளைப் பற்றி நான் ஏற்கனவே பகிர்ந்துள்ளேன். எனது கிரிக்கெட் பயணத்தின் முதல் நாளில் இருந்து இன்று வரை, எனக்கு ஆதரவாக இருந்த சக வீரர்கள், உதவிப் பணியாளர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது எனக்கு மிகுந்த பெருமையளிக்கும் தருணம். கிரிக்கெட்டில் நான் இவ்வளவு தூரம் வருவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. தற்போது நான் 100 முதல்தரப் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், இந்திய அணிக்காகவும் விளையாடியுள்ளேன்" என்று தெரிவித்தார்.
மேலும் அவர் இளம் வீரர்களுக்கு அறிவுரை வழங்கிய ஷமி, "யாரும் தாங்கள் எவ்வளவு தூரம் பயணிப்போம் என்று முன்கூட்டியே கணிக்க முடியாது, ஆனால் அனைவரும் கடினமாக உழைக்கிறார்கள். எனவே நான் கூற விரும்புவது ஒன்றே ஒன்றுதான், தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும். உங்களது உழைப்பு உங்களை எப்போது, எந்தவொரு உயரத்திற்கு கொண்டு செல்லும் என்பது உங்களுக்கே தெரியாது.
கிரிக்கெட் விளையாட்டு கோரும் அர்ப்பணிப்பையும் விசுவாசத்தையும் எப்போதும் தவறவிடாதீர்கள். நீங்கள் எந்த அணிக்காக விளையாடினாலும், அதற்காக உங்களின் முழு ஆற்றலையும் கொடுங்கள்" என்றார்.வலது கை வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, தனது 100 முதல்தரப் போட்டிகளில் 26.28 சராசரியுடன் 384 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் 15 முறை ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.