📅 Wednesday, 16 September 2026 IST | ஆவணி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 16, 2026 05:33 PM

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 414 பரிவார தெய்வங்களுக்கு இன்று கும்பாபிஷேகம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 414 பரிவார தெய்வங்களுக்கு இன்று கும்பாபிஷேகம்

மதுரை, செப். 16–மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று 414 பரிவார தெய்வங்களுக்கான கும்பாபிஷேகம் நடந்தது.மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் 17 ஆண்டுகளுக்கு பிறகு நாளை மகா கும்பாபிஷேகம் மிகவும் விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்காக பல லட்ச ரூபாய் மதிப்பில் வடக்கு ஆடி வீதியில் பிரமாண்ட யாக சாலை அமைக்கப்பட்டு, முதல் கால யாக பூஜை கடந்த 11-ந் தேதி மாலையில் தொடங்கியது. நேற்று காலையில் 8-ம் கால யாக பூஜையும், மாலையில் 9-ம் கால யாக பூஜையும் நடந்தன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 400-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்களால் இந்த பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.விழாவில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக 414 பரிவார தெய்வங் களுக்கான கும்பாபிஷேகம் இன்று காலையில் நடந்தது. இதையொட்டி அதிகாலை 3.45 மணிக்கு 10-ம் கால யாகசாலை பூஜை தொடங்கியது. பல்வேறு வேள்வி பூஜைகளுக்கு பின்னர், காலை 5 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கான யாகசாலையில் வைக்கப்பட்டுள்ள கும்ப கலசங்களுக்கு தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றது. பின்னர் டங்கா மாடு, யானை, மேளதாளம் முழங்க அந்த யாகசாலையில் இருந்து புனிதநீர் கலசங்கள் புறப்பாடாகி அனைத்து பரிவார சுவாமி சன்னதிகளுக்கும் எடுத்து செல்லப்பட்டன. தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கு அந்த புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.குறிப்பாக தட்சிணாமூர்த்தி, துர்க்கை, லட்சுமி, பத்திரகாளி, 63 நாயன்மார்கள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு இன்று கும்பாபிஷேகம் நடந்தது. மாலையில் 11-ம் கால யாக பூஜைகள் நடக்கின்றன. குறிப்பாக மூலவர் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், தங்க விமானங்கள், ராஜகோபுரங்கள், சன்னதி கோபுரங்கள் உள்ளிட்டவற்றுக்கான கும்ப கலசங்களுக்கு இந்த பூஜைகள் நடக்கின்றன.நாளை மகா கும்பாபிஷேக விழாவையொட்டி அதிகாலை 4 மணி அளவில் 12-ம் கால யாக பூஜைகள் நடைபெறுகின்றன. பின்னர் காலை 5.45 மணி அளவில் புனித கலசகுடங்கள் புறப்பாடு நடக்கிறது. காலை 7.40 மணிக்கு ராஜகோபுரங்கள், தங்க விமானங்களுக்கும், 7.55 மணிக்கு மீனாட்சி அம்மனுக்கும், 8.10 மணிக்கு சுந்தரேசுவரருக்கும் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற இருக்கிறது. இதில் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் விரிவான ஏற்பாடுகளும், பலத்த பாதுகாப்பும் செய்யப்பட்டு உள்ளன. கோவில் கோபுரங்கள், பிரகாரங்கள், சுற்றுப்பகுதிகள் அனைத்தும் மின்னொளியில் ஜொலிக்கின்றன. மதுரை விழாக்கோலம் பூண்டுள்ளது.2 ஆயிரம் பக்தர்களுக்கு பாஸ்இது தொடர்பாக இன்று காலை அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில், 18–ந் தேதி வரை கோவில் பகுதியில் ரோட்டோர கடைகள் வைக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது; கும்பாபிஷேக ஏற்பாடுகள் தயார்; அனைத்து துறையினர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது.கும்பாபிஷேகத்தை காண 2 ஆயிரம் பேருக்கு பாஸ் வழங்கப்பட்டு உள்ளது. பாஸ் விவகாரத்தில் நான் எங்கும் தலையிடவில்லை. இன்று பிற்பகல் 2 மணி முதல் போலீசாரின் பாதுகாப்பு பணிகள் தீவிரமாகும்; பக்தர்கள் வரும் வழிகளில் ஒத்திகை பார்க்கப்படுகிறது. அறங்காவலர்கள் செயல்படுவதை தடுக்கவில்லை. அறங்காவலர்களின் தேவைகளை பேசி நிவர்த்தி செய்வோம்.பொதுப்பணித்துறை யினரின் ஆய்வின் அடிப்படையில் நபர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மக்கள் சிரமம் இன்றி வந்து செல்லவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற வேண்டும்; பக்தர்களின் தேவையை உணர்ந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.அறங்காவலர்கள் குற்றச்சாட்டுஇந்தநிலையில் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன், அறங்காவலர்கள் டாக்டர் சீனிவாசன், சுப்புலட்சுமி ஆகியோர் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், கும்பாபிேஷேக விழா அழைப்பிதழில் எங்களின் பெயர் புறக்கணிக்கப்பட்டு, அதனை கோர்ட் அறிவுறுத்தி பேசுபொருளானது. எங்களை எந்த செயல்பாட்டிலும் கலந்து ஆலோசிக்காமல், தன்னிச்சையாக அரசியல் தலையீடு கொண்டதாக கோவில் நிர்வாகத்தின் செயல்பாடுகள் உள்ளன. 1963-ம் ஆண்டு பி.டி.ராஜன் தலைமையில் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்று, மீனாட்சி அம்மனுக்கு வைரக்கிரீடம் சாற்றிய குடும்பத்தின் வழி வந்த எங்கள் குடும்பத்தில் என்றைக்குமே அரசியலையும், ஆன்மிகத்தையும் இணைத்து பார்த்ததில்லை. ஆன்மிக திருப்பணிகள் சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதில் கண்ணும் கருத்தும் இருக்கும் நாங்கள், அதில் அரசியல் கலந்துவிடக்கூடாது என்று குற்றம் சாட்டினர்.இதுகுறித்து பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், அறங்காவலர்களின் செயல்பாடுகளை தடுக்கவில்லை. அறங்காவலர்களின் தேவை என்ன என அதிகாரிகள் மூலம் கேட்டறியப்படும் என்றார்.