மதுராந்தகம் சட்டமன்ற தனி தொகுதி இடைத்தேர்தல்: 893 தபால் வாக்குகள் பதிவு
மதுராந்தகம் சட்டமன்ற தனி தொகுதி இடைத்தேர்தல்: 893 தபால் வாக்குகள் பதிவு
அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ள பிரதான வாக்குப்பதிவை முன்னிட்டு மதுராந்தகம் தொகுதியில் தேர்தல் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Published : September 29, 2026 at 12:25 PM IST
செங்கல்பட்டு: மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தபால் வாக்குப்பதிவிற்கு 931 பேர் தகுதி பெற்றிருந்த நிலையில் 893 வாக்குகள் பதிவாகி உள்ளன. 38 பேர் பல்வேறு காரணங்களால் வாக்களிக்கவில்லை.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டப்பேரவைத் தனித் தொகுதியில் வரும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கடந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததைத் தொடர்ந்து மதுராந்தகம் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது அங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், பரிசீலனை மற்றும் திரும்பப் பெறுதல் உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில் 27 வேட்பாளர்கள் இறுதியாக போட்டியிடுகின்றனர். இதையடுத்து தொகுதியில் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.
இதற்கிடையே வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று வாக்களிக்க இயலாத 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக வீடுகளிலேயே தபால் வாக்குப்பதிவு செய்யும் சிறப்பு ஏற்பாடு தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டது.
மதுராந்தகம் தொகுதியில் இதற்காக மொத்தம் 931 பேர் தகுதி பெற்றிருந்தனர். இதில் 480 பேர் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், 451 பேர் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள். தேர்தல் அலுவலர்கள் மற்றும் தேர்தல் பணியாளர்கள் வாக்காளர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று தபால் வாக்குகளைப் பதிவு செய்தனர். வாக்குப்பதிவின்போது ரகசியத்தன்மையை பாதுகாக்கும் வகையிலும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதையடுத்து கடந்த 22ஆம் தேதி மதுராந்தகம் தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வீடுகளுக்கு தேர்தல் அலுவலர்கள் நேரடியாகச் சென்று வாக்குப்பதிவை மேற்கொண்டனர். வீட்டிலேயே வாக்களிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் முதியவர்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
வீட்டு தபால் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் தகுதிபெற்ற 931 பேரில் 893 பேர் வாக்களித்துள்ளனர். உயிரிழப்பு, வாக்களிக்க முடியாத நிலை, வெளியூர் சென்றிருத்தல் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருதல் உள்ளிட்ட காரணங்களால் 38 பேர் வாக்களிக்கவில்லை.