மத்திய மந்திரி எல்.முருகன் ராஜினாமா ஏன்? பரபரப்பு தகவல்கள்
மத்திய மந்திரி எல்.முருகன் ராஜினாமா செய்தது தொடர்பாக, பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபையில் இணை மந்திரியாக இருந்தவர் எல்.முருகன். தமிழ்நாட்டை சேர்ந்தவரான எல்.முருகன், கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை 7-ந்தேதி முதல் முறையாக மத்திய மந்திரியானார். அப்போது அவருக்கு தகவல்-ஒலிபரப்பு மற்றும் மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை இணை மந்திரி பொறுப்பு வழங்கப்பட்டது.
2024-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, 3-வது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்றபோதும், எல்.முருகனுக்கு இணை மந்திரி பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த முறை தகவல்-ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை ஒதுக்கப்பட்டது.
அவர் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு இரு முறை தேர்ந்து எடுக்கப்பட்டார். இந்த நிலையில் எல்.முருகன், நேற்று தனது மந்திரி பதவியை திடீரென்று ராஜினாமா செய்தார். மேலும் நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்தும் விலகினார்.
5 பக்க கடிதம்
நன்றியுணர்வு
உங்கள் தலைமையின் கீழ் இந்தியாவுக்கும். தமிழ்நாட்டுக்கும் சேவை செய்தது எனது வாழ்வின் மிகப்பெரிய கவுரவமாகும். நான் ஒரு அரசியல் குடும்பத்தை சேர்ந்தவன் அல்ல. மிக ஏழைக்குடும்பத்தில் இருந்து வந்தவன். தினக்கூலி தொழிலாளர்களாகவும், மாடு மேய்ப்பவர்களாகவும் பணியாற்றிய எனது பெற்றோர் இன்றும் கோனூர் கிராமத்தில் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். தங்களது மகன் என்றாவது ஒரு நாள் மத்திய அரசில் பணியாற்றுவான் என்று அவர்கள் கற்பனை செய்துகூட பார்த்திருக்கமாட்டார்கள்.
அளப்பரிய பெருமை
உங்கள் தலைமையும், களப்பணியாளர்களை அங்கீகரிப்பதில் பா.ஜ.க. கொண்டுள்ள அர்ப்பணிப்பும், நான் கற்பனை செய்ததற்கும் மேலாக எனக்கு வாய்ப்புகளை வழங்கின. பட்டியல் சாதியினருக்கான தேசிய ஆணையத்தின் துணைத்தலைவராக பணியாற்றியது முதல் 2 முறை மாநிலங்களவை உறுப்பினரானது வரை உங்கள் மந்திரி சபையில் பணியாற்றிய ஒவ்வொரு பொறுப்பும் உங்கள் நம்பிக்கையின் வெளிப்பாடாகும்.
கட்சியை வலுப்படுத்த...
கட்சியில் இருந்தும், உங்கள் தலைமையில் இருந்தும் நான் பெற்ற அனைத்தும் எனது பொறுப்புணர்வை ஆழப்படுத்தியுள்ளன. இந்தியா, தமிழ்நாடு மற்றும் பா.ஜ.க. மீதான உங்களின் அர்ப்பணிப்பு, என்னை முதன்முதலில் பொதுவாழ்க்கைக்கு கொண்டு வந்த பணிக்கு இப்போது நான் இன்னும் அதிகமாக பங்காற்ற வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
எனவே, தாழ்மையோடும், நன்றியுள்ள இதயத்தோடும், என்னை இணை மந்திரி பொறுப்பில் இருந்து விடுவித்து, மாநிலங்களவை உறுப்பினர் பதவியை துறக்க அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதன் மூலம் தமிழ்நாட்டில் கட்சியை வலுப்படுத்தும் பணியில் முழுநேரமாக என்னை ஈடுபடுத்திக்கொள்ள முடியும்.
நாடாளுமன்ற தேர்தல் பணி
நான் ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒவ்வொரு தெருவிற்கும் செல்ல விரும்புகிறேன். நமது மக்களை சந்திக்கவும், நமது களப்பணியாளர்களுக்கு பக்கபலமாக நிற்கவும், மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் கட்சியின் இருப்பை விரிவுபடுத்த உதவவும் விரும்புகிறேன்.
2029 நாடாளுமன்ற தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்தவும், மற்றொரு முறை உங்கள் தலைமையின்கீழ், இந்த முறை தமிழ்நாட்டிலிருந்து அமோக வெற்றி இடங்களின் பங்களிப்போடு ஆட்சியைப்பிடிக்க உழைக்கவும் எனது முழு நேரத்தையும், ஆற்றலையும் அர்ப்பணிக்க விரும்புகிறேன்.
வாழ்வின் பாக்கியம்
கடந்த 5 ஆண்டுகளாக உங்கள் அரசில் பணியாற்றும் பாக்கியத்தை பெற்றதற்காக இதயம் கனிந்த நன்றியுடன் இந்த கோரிக்கையை வைக்கிறேன். தினக்கூலித்தொழிலாளரின் மகன் மீது நீங்கள் வைத்த நம்பிக்கை எனது வாழ்வின் மிகப்பெரிய பாக்கியமாக என்றும் இருக்கும்.
நமது மக்களுக்கும், நமது கட்சித்தொண்டர்களுக்கும் அயராத உழைப்பின் மூலம் அந்த நம்பிக்கையை ஈடுகட்ட இப்போது உங்கள் ஆசீர்வாதங்களை நாடுகிறேன். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
டெல்லியில் பேட்டி
தனது ராஜினாமா குறித்து டெல்லியில் எல்.முருகன் கூறுகையில், தமிழ்நாட்டுக்கு சென்று கட்சிப்பணி ஆற்ற வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். மாநிலத்தில் எனது கட்சியை வலுப்படுத்தி, 2029 தேர்தலுக்கு களம் அமைக்க விரும்புகிறேன். கட்சி எனக்கு நிறைய செய்து இருக்கிறது.
பிரதமர் மோடி தமிழின் பெருமையை உலக அளவில் கொண்டு சென்றுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாட்டுக்கு வருகை தந்தார். அவர் மீது மக்கள் காட்டிய உற்சாகம், அன்பு மற்றும் பாசத்தை நான் கண்டேன். எனவே, நான் தமிழ்நாட்டில் தெருத்தெருவாக வீடு வீடாக சென்று கட்சியை வலுப்படுத்த மேலும் விரிவாக பணியாற்ற வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக என்னை பொறுப்புகளில் விடுவித்து. மாநிலத்துக்கு அனுப்புமாறு கேட்டுள்ளேன் என்றார்.
அரசியலில் பரபரப்பு
சமீபத்தில் பிரதமர் மோடி, தமிழகம் வந்தபோது அவருடன் எல்.முருகன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்த நிலையில் அவர் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது மத்திய மந்திரி சபை விரிவாக்கத்துக்கு முன்னோட்டமாக இருக்கலாம் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.