மம்தாவின் இடைத்தேர்தல் ஆதரவு எதிரொலி; நந்திகிராம் காங் வேட்பாளர் திடீர் கைது
கோல்கட்டா: நந்திகிராம் காங்கிரஸ் வேட்பாளர் கைது செய்யப்பட்டு உள்ளார். இடைத்தேர்தலில் மம்தா தமது ஆதரவை காங்கிரசுக்கு அறிவித்த சிறிது நேரத்தில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின்னர் மம்தாவின் திரிணமுல் உடைந்தது. பெரும்பாலான எம்பிக்கள், எம்எல்ஏக்கள் தனி அணியை உருவாக்கினர். தொடர் குழப்பங்களுக்கு மத்தியில் திரிணமுல் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை தேர்தல் கமிஷன் முடக்கியது.
அக்.6ம் தேதி நடக்க இருக்கும் நந்திகிராம் இடைத்தேர்தலில் இரு தரப்பினருக்கும் தனித்தனியே சின்னங்கள், பெயர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கை ஒருபக்கம் இருக்க, மம்தா அணி வேட்பாளர் சஞ்சிதா பிரதான்டே, வேட்பு மனுவை வாபஸ் பெற்றார்.
இதனால் அதிர்ந்து போன மம்தா, இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தார். இந் நிலையில், நந்திகிராம் காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதான் கைது செய்யப்பட்டு உள்ளார். காங்கிரசுக்கு தமது ஆதரவை அளிப்பதாக மம்தா அறிவித்த சிலமணி நேரங்களில் இந்த கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது.
2007ல் நந்திகிராம் நிலம் கையகப்படுத்துதலுக்கு எதிராக மம்தா பானர்ஜி போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது இரண்டு கொலை சம்பவங்கள் நிகழ்ந்தன.
அதில் ஒரு கொலை சம்பவத்தில் மிலன் பிரதானுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த வழக்கில் அவர் மீது கைது வாரண்ட் நிலுவையில் இருந்து வந்துள்ளது. அதன் அடிப்படையிலேயே மிலன் பிரதான் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார்.
இதுகுறித்து மேற்கு வங்க காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்.' இதற்கும் இடைத்தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒவ்வொரு தேர்தலின் போதும் நிலுவையில் இருக்கும் கைது வாரண்ட்களின் நிலை என்ன என்பதை நாங்கள் ஆய்வு செய்வோம்..
மிலன் பிரதானுக்கு எதிராக பழைய வாரண்ட் ஒன்று நிலுவையில் இருப்பதை கண்டறிந்தோம்.அவர் நாளை (செப்.19) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்' என்றார்.