மக்களை வாட்டும் பணவீக்கம்… ஆட்சியாளர்கள் செய்ய வேண்டியது என்ன?
மக்களை வாட்டும் பணவீக்கம்… ஆட்சியாளர்கள் செய்ய வேண்டியது என்ன?
கச்சா எண்ணெய் விலை 41 சதவிகிதம் அதிகரிப்பு, ரூபாய் மதிப்புச் சரிவு உட்பட பல்வேறு நெருக்கடிகள் இந்தியப் பொருளாதாரத்தைச் சூழ்ந்திருக்கின்றன.
இந்தியாவில் சில்லறைப் பணவீக்கம் 5.54 சதவிகிதமாகவும், உணவுப் பணவீக்கம் 7.74 சதவிகிதமாகவும் தற்போது அதிகரித்திருப்பது ஏழை, எளிய, நடுத்தர மக்களைப் பெரும் கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களே பணவீக்கம் அதிகரிப்புக்குக் காரணம் என்று குறிப்பிடும் பொருளாதார நிபுணர்கள், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு எடுக்கவேண்டிய நடவடிக்கைகளைப் பட்டியலிடுகிறார்கள்.
இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் 4.83 சதவிகிதமாக இருந்த சில்லறைப் பணவீக்கம், செப்டம்பரில் 5.54 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. அதே போல, கடந்த ஆகஸ்ட் மாதம் 5.97 சதவிகிதமாக இருந்த உணவுப் பணவீக்கம், செப்டம்பரில் 7.74 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. இதனால், இந்தியக் குடும்பங்களின் அன்றாடச் செலவுகள் அதிகரித்திருக்கின்றன.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஓராண்டில் சுமார் 7 சதவிகிதம் சரிந்திருக்கிறது. ரூபாய் மதிப்பு குறையும்போது, இறக்குமதிப் பொருள்களை வாங்குவதற்கான செலவு அதிகரிக்கிறது. இதனால் கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருள்களின் விலை உயர்வு மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உரம் விலையும் அதிகரிப்பு!
2026-ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச் சந்தையிலிருந்து ரூ.3.08 லட்சம் கோடியைத் திரும்பப் பெற்றிருக்கிறார்கள். இது 2025-ம் ஆண்டு முழுவதும் வெளியேறிய தொகையைவிட கிட்டத்தட்ட இரு மடங்கு. `இவ்வாறு வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறுவது ரூபாய் மதிப்பின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும்’ என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
இந்த விவகாரம் குறித்து பொருளாதாரப் பேராசிரியரான வெங்கடேஷ் ஆத்ரேயாவிடம் பேசினோம். “இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயின் சராசரி விலை, ஜூலையில் பேரலுக்கு 82.04 டாலராக இருந்தது. செப்டம்பரில் 116.09 டாலராக உயர்ந்தது. இது 41 சதவிகித அதிகரிப்பு. கச்சா எண்ணெய் தேவைக்கு இறக்குமதியை இந்தியா சார்ந்திருப்பதால், சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்தியாவின் பொருளாதாரத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டில் உணவுப் பணவீக்கம் அதிகமாக இருப்பதற்கு, ஒப்பீட்டளவில் பொருளாதார நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் அதிகம் என்பதுதான் காரணம்.
மேற்கு ஆசியா போர் காரணமாக, கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உரம் விலையும் அதிகரிக்கிறது. இந்தியாவில் உரம் உள்ளிட்ட விவசாய இடுபொருள்களின் விலைகயும் கணிசமாக உயர்ந்திருக்கிறது. அதனால், விவசாயிகளின் உற்பத்திச் செலவுகள் அதிகரிக்கின்றன. அதன் தாக்கம் உணவுப் பொருள்களின் விலையிலும் எதிரொலிப்பது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. எனவே, விவசாயிகளின் உற்பத்திச் செலவு உயர்வைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்” என்கிறார் வெங்கடேஷ் ஆத்ரேயா.
விலை உயர்வால் சில வியாபாரிகள் பதுக்கலில் ஈடுபடுவர்!
இந்த விவகாரம் குறித்து, பொருளாதாரப் பேராசிரியர் ராஜலட்சுமியிடம் பேசினோம். “காலநிலை மாற்றம், விவசாய உற்பத்திச் செலவு அதிகரிப்பு, சந்தையில் தேவை உயர்வு, மக்களின் உணவுப் பழக்கத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் எனப் பல காரணிகள் ஒன்றோடொன்று இணைந்து உணவுப் பணவீக்கத்தைத் தீவிரப்படுத்துகின்றன.
மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும்போது, உணவுப் பொருள்களுக்கான தேவையும் அதிகரிக்கிறது. ஆனால், அந்தத் தேவைக்கு ஏற்ப உற்பத்தி அதிகரிக்காதபோது, சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்கிறது. குறிப்பாக, உற்பத்திக் குறைவும் நுகர்வுத் தேவையின் அதிகரிப்பும் ஒரே நேரத்தில் நிகழும்போது, விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது சவாலாகிறது.
உள்நாட்டு உற்பத்தி குறையும்போது, மக்களின் தேவையைப் பூர்த்திசெய்ய இறக்குமதியை அதிகரிக்க வேண்டியிருக்கலாம். அதேபோல், ஏற்றுமதிக் கொள்கைகளும் உள்நாட்டுச் சந்தையில் கிடைக்கும் பொருள்களின் அளவை பாதிக்கலாம். எனவே, உணவுப்பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த, சந்தைச் சூழலுக்கு ஏற்ப இறக்குமதி, ஏற்றுமதிக் கொள்கைகளை மாற்றியமைப்பது அவசியம்.
உணவுப்பொருள்களின் விலை மேலும் உயரும் என்ற எதிர்பார்ப்பில், சில வியாபாரிகள் அதிக அளவில் பொருள்களை வாங்கி, பதுக்கும் செயலில் ஈடுபடக்கூடும். எனவே, சந்தையில் உடனடியாகக் கிடைக்கும் பொருள்களின் அளவு குறைந்து, விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, பதுக்கலைத் தடுப்பதும், சந்தையில் போதுமான இருப்பை உறுதிசெய்வதும் முக்கியம். உணவுப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு, மாநில அரசு என இரு அரசுகளுக்குமே பொறுப்பும் கடமைகளும் இருக்கின்றன” என்கிறார் பேரா. ராஜலட்சுமி.
பணவீக்கம் என்பது வெறும் புள்ளிவிவரம் அல்ல; மக்களின் வாங்கும் திறனையும், சேமிப்பையும், வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் நெருக்கடி. எனவே, பொருளாதார வல்லுநர்களின் ஆலோசனைகளின்படி, மத்திய, மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்!