📅 Thursday, 01 October 2026 IST | புரட்டாசி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 01, 2026 06:03 PM

கருவுறுதல்: சிங்கப்பூர் இளைஞர்களிடையே விழிப்புணர்வு குறைவு

கருவுறுதல்: சிங்கப்பூர் இளைஞர்களிடையே விழிப்புணர்வு குறைவு

சிங்கப்பூரில் ஆய்வு செய்யப்பட்ட இளம் பெரியோரில் பாதிக்கும் மேற்பட்டோர் தங்களுக்குக் கருவுறுதல், இனப்பெருக்க ஆரோக்கியம் குறித்து நன்கு தெரியும் என்று நம்புகின்றபோதும், பத்தில் ஒருவர் மட்டுமே கருவுறுதல் குறித்த அடிப்படை கேள்விகளுக்குப் பதில்கள் அறிந்திருந்தனர்.

பெற்றோராக விரும்புபவர்களிடமும் அந்த அறிவாற்றல் இடைவெளி தெளிவாகத் தெரிந்தது.

எதிர்காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்வது முக்கியம் என்று கூறிய குழந்தை இல்லாதவர்களில் 43 விழுக்காட்டினர், கருவுறுதல் குறித்த ஐந்து கேள்விகளில் இரண்டு அல்லது அதற்கும் குறைவானவற்றுக்கு மட்டுமே சரியாகப் பதிலளித்தனர்.

தாம்சன் மெடிக்கல் - சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய அந்த ஆய்வில் பங்கேற்ற பெரும்பாலோர் பெற்றோராக விரும்புவதாகத் தெரிவித்தனர்.

அவர்களில் 84 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ள விரும்புவதாகக் கூறினர்.

கிட்டத்தட்ட பாதிப் பேர், அதாவது 51 விழுக்காட்டினர் இரண்டு குழந்தைகள் கொண்ட குடும்பத்தை விரும்புகின்றனர் என்றும் 16 விழுக்காட்டினர் குழந்தைகள் வேண்டாம் என்றும் தெரிவித்தனர்.

இவ்வாண்டு ஜூன் மாதத்தில் முதன்முறையாக நடத்தப்பட்ட அந்த ஆய்வில், 1,035 பேரிடம் அவர்களின் பெற்றோர்பருவ விருப்பங்கள், குழந்தைப் பெற்றுக்கொள்ளும் நேரம், கருவுறுதல் பற்றிய விழிப்புணர்வு ஆகியவை குறித்துக் கருத்துக் கேட்கப்பட்டது.

லீ குவான் யூ பொதுக் கொள்கைப் பள்ளியைச் சேர்ந்த முதன்மை ஆய்வாளர் ரூபன் இங்கின் தலைமையில் அந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

18 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களிடம், கருவுறுதல் சேவைகள் பற்றிய அவர்களின் விழிப்புணர்வு அல்லது அணுகுமுறைகள் குறித்தும் கேட்கப்பட்டது.

ஆய்வில் பங்கேற்றவர்களின் சராசரி வயது 28.8 ஆகும். மேலும், அவர்களில் 87 விழுக்காட்டினர் சிங்கப்பூர் குடிமக்கள்.

வியாழக்கிழமை (அக்டோபர் 1) நடந்த செய்தியாளர் கூட்டத்தில் ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டன. ஆய்வில் பங்கெடுத்த பெரும்பாலோர், வயது அதிகரிக்கும்போது கருவுறும் ஆற்றல் குறைகிறது என்பதைப் பொதுவாகப் புரிந்துகொண்டபோதிலும், அவர்களின் இனப்பெருக்க ஆரோக்கியம் குறித்த அறிவாற்றலில் இடைவெளிகள் இருப்பதை ஆய்வு காட்டியது.

திருமணம், பிள்ளைப்பேறு குறித்த மறுசீரமைப்புப் பணிக்குழுவின் முழுமையான அறிக்கை 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தயாராகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த முடிவுகள் வெளியாகியுள்ளன.