கலைஞர் குடும்பத்தின் மீது விஜய்க்கு இருந்த கண்.. கடைசிவரை அந்த ஆசை நிறைவேறவில்லையே!
சென்னை: நடிகராக இருந்த விஜய் இப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராகியிருக்கிறார். சட்டப்பேரவையில் அவர் நேற்று பேசியது அவரது கட்சியினரிடையே வேண்டுமானால் மகிழ்ச்சியை உண்டு செய்திருக்கலாம்; ஆனால் பொதுமக்களிடம் அவ்வளவு ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் அவரது ஆசை ஒன்று நிறைவேறாமல் போய்விட்டதாக வீடியோ ஒன்று பரவிவருகிறது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதிலிருந்து அவரை திமுகவினர் எவ்வளவு விமர்சனம் செய்ய முடியுமோ அவ்வளவு செய்கிறார்கள். அதற்கேற்றபடிதான் அவரது நடவடிக்கைகளும் இருக்கின்றன. காவல் துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் தமிழ்நாட்டில் சீர்குலைந்திருக்கும் சட்டம் - ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அதுமட்டுமின்றி நன்றாக முன் தயாரிப்பு செய்துகொள்ளவும் என்றும் நேரம் கொடுத்திருந்தார்.
வழக்கமான ஃபார்முலாதான்: விஜய்யும் திங்கட் கிழமை வந்து பதில் சொல்வேன் என்று சொல்லிவிட்டு சென்றார். எனவே தன்னுடைய பதிலுரையில் கண்டிப்பாக அத்தனைக்கும் பதில் சொல்லி எதிர்க்கட்சி தலைவரின் வாயை அடைப்பார் என்று எதிர்பார்த்தால்; அவரோ வழக்கம்போல் நேற்று வந்து சர்க்காரியா கமிஷனின் அறிக்கை, அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுக்களை வாசித்தும், மிசாவில் ஸ்டாலின் கைதை கிண்டல் செய்தும் திமுகவைத்தான் அட்டாக் செய்தார்.
வெளியே கிளம்பிய உதயநிதி: விஜய் அந்த விஷயங்களை வாசிக்க வாசிக்க; உதயநிதி ஸ்டாலினோ, 'ஏதாவது புதுசா சொல்லுங்களேன்' என்பது மாதிரியான ரியாக்ஷனை கொடுத்தார். விஜய்யின் அந்த வாசிப்பில் இன்னொரு விஷயமும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது, முன்னாள் ஒன்றிய அமைச்சரும், தயாநிதி மாறன், கலாநிதி மாறனின் தந்தையும், கலைஞரின் மருமகனுமான முரசொலி மாறனின் பேச்சையும் இழுத்தார்.
ரவுண்டு கட்டி அடிக்கும் விஜய்: கட்சி ஆரம்பித்ததிலிருந்தே கலைஞர் குடும்பத்தைத்தான் ரவுண்டு கட்டி அட்டாக் செய்துவருகிறார். அதற்கு அவர்களும் தக்க பதிலடி கொடுத்தே வருகிறார்கள். அதுவும் குருவி (ரெட் ஜெயண்ட்), பீஸ்ட், சர்கார், சுறா (சன் பிக்சர்ஸ்) ஆகிய விஜய்யின் படங்கள் கலைஞர் மற்றும் முரசொலி மாறனின் குடும்பத்தினரால் தயாரிக்கப்பட்டவை. மேலும் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது தயாநிதி மாறன் சொன்னதால் பொங்கல் சிறப்பு தபால் தலை வெளியீட்டு நிகழ்வில் விஜய் மேடை ஏற்றப்பட்டார்.
விஜய்யின் வீடியோ: இப்படி அந்த குடும்பத்தோடு மிக நெருக்கமாக இருந்துவிட்டு; இப்போது சாட்டையை சுழற்றுவது கொஞ்சம் வியப்பைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது. இப்போது அவர் அக்குடும்பத்தை அட்டாக் செய்தாலும்; ஒருகாலத்தில் அந்தக் குடும்பத்தை பார்த்து ஆசைப்பட்ட வரலாறும் உண்டு. அதாவது ஒரு விழாவில் பேசிய அவர், 'உதயநிதி, தயாநிதி, அருள்நிதி, கனிமொழி, தமிழரசு இந்த மாதிரி பெயர்களை கேட்கும்போதே படங்களுக்கு டைட்டிலாக வைக்க வேண்டும் என்று தோன்றும்.
பேர் சொல்லக்கூடிய குடும்பம்: அந்த அளவுக்கு பவர்ஃபுல்லான பெயர்கள். இந்தியாவிலேயே பரம்பரை பரம்பரையாக பேர் சொல்லக்கூடிய குடும்பம் என்றால்; அது ஜவஹர்லால் நேருவின் குடும்பம். தமிழ்நாட்டில் பேர் சொல்லக்கூடிய குடும்பம் என்றால் அது கலைஞர் ஐயாவுடைய குடும்பம்" என்றார். ஆனால் அவரது ஆசைப்படி கடைசிவரை அவருடைய படங்களுக்கு மேற்கூறிய பெயர்களை எதுவும் வைக்க முடியவில்லை..