ஏர் இந்தியாவின் நம்பிக்கை & பாதுகாப்பு: சந்திரசேகரன் வலியுறுத்தல்
மும்பை: ஏர் இந்தியா நிறுவனம், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மீண்டும் பெற வேண்டும். அதேவேளையில் செலவினங்களையும் அது குறைக்க வேண்டும் என்று டாடா சன்ஸ் தலைவர் நடராஜன் சந்திரசேகரன் வலியுறுத்தியுள்ளார்.
2027 பிப்ரவரியில் பதவியிலிருந்து விலகவுள்ள நிலையில், ஊழியர்கள் பங்கேற்ற கூட்டத்தில் அவர் உரையாற்றினார். ஏர் இந்தியாவின் மறுமலர்ச்சியே தமது பதவிக்காலத்தின் முக்கிய இலக்கு என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த 18 மாதங்களில் புவிசார் அரசியல் சிக்கல்கள், வான்வெளி மூடல், எரிபொருள் விலையேற்றம், உயிர்ச்சேதம் ஏற்படுத்திய விபத்து எனப் பல சவால்களை ஏர் இந்தியா எதிர்கொண்டது. கடந்த நிதியாண்டில் ஏர் இந்தியா முன்னெப்போதும் இல்லாத அளவாக ரூ.220 பில்லியன் (S$2.96 பி.) இழப்பைச் சந்தித்தது. மேலும், பாதுகாப்பு தொடர்பான பல விசாரணைகளையும் அது எதிர்கொண்டது.
அண்மையில் ஏர்பஸ் எஸ்இ ஏ320 விமானம் உயரத்திலிருந்து திடீரென சரிவு கண்டதில் சம்பந்தப்பட்ட விமானி, போதைப்பொருள் பரிசோதனையில் சிக்கியது போன்றவை புதிய சோதனைகளை எழுப்பின.
இந்நிலையில், உலகின் சிறந்த விமான நிறுவனங்களைவிட ஏர் இந்தியாவின் பாதுகாப்பு அம்சம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று சந்திரசேகரன் கூறினார்.
தற்போது டாடா சன்ஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இரு நிறுவனங்களிடமிருந்து ரூ.100 பில்லியன் நிதியுதவியைப் பெற ஏர் இந்தியா நெருங்கியுள்ளது.
இக்கூட்டத்தில் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ‘தெவோல்டே கெப்ரமரியம்’ முறைப்படி அறிமுகம் செய்யப்பட்டார். எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய, அதிக லாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றிய அனுபவம் அவருக்கு உள்ளது.
ஏர் இந்தியாவின் அதிகரிக்கும் நிதி இழப்புகளைக் கட்டுப்படுத்துவது புதிய தலைமைக்கு முக்கியச் சவாலாக இருக்கும்.