கிரீன் கார்டு திட்டத்திலிருந்து சஸ்பெண்ட்: இந்தியா ஐடி நிறுவனங்களுக்கு அமெரிக்கா கொடுத்த ஷாக்
- நமது நிருபர் -
வெளிநாட்டு ஊழியர்கள் நிரந்தர குடியுரிமை பெறுவதற்காக பயன்படுத்தப்படும் நிரந்தர தொழிலாளர் சான்றிதழ் திட்டத்தில்( PERM) முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டி இன்போசிஸ், டிசிஎஸ், விப்ரோ, எச்சிஎல் மற்றும் காக்னிசன்ட் உள்ளிட்ட நிறுவனங்களை சஸ்பெண்ட் செய்து அமெரிக்க தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.
Perm என்பது, வெளிநாட்டு தொழிலாளர்கள் நிரந்தர கிரீன் கார்டுக்காக பணியமர்த்த நிறுவனங்களின் அதிபர்களுக்கு அமெரிக்க தொழிலாளர் துறை வழங்கும் அனுமதி ஆகும். இத்திட்டத்தின் கீழ், கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் முன்னர், குறிப்பிட்ட வேலைக்கு தகுதியான, விருப்பமுள்ள அமெரிக்கத் தொழிலாளர்கள் யாரும் இல்லை என்பதற்கான சான்றிதழை பெற அந்த வேலையை அளிப்பவர்கள் அமெரிக்க தொழிலாளர் நலத்துறையை அணுகுவார்கள்.
தற்போது இந்த திட்டத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டது, அமெரிக்காவில் இந்திய ஐடி நிபுணர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகளை வழங்கும் இன்போசிஸ், டிசிஎஸ், விப்ரோ மற்றும் எச்சிஎல் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தும், நிரந்தரமாக குடியுரிமை பெற விரும்பும் ஊழியர்களையும் பாதிக்கும்.
அதேநேரத்தில் எச்1பி விசாக்களை ரத்து செய்யவோ அல்லத நிறுவனங்கள் அந்த விசாவின் கீழ் பணியாளர்களை பணியமர்த்துவதை தடுக்கவோ இல்லை. அந்த நிறுவனங்கள் Perm திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்வதை தடுக்கிறது. நிலுவையில் உள்ள விண்ணப்பங்களும் நிறுத்திவைக்கப்படும். இதனால், இந்திய ஐடி நிறுவனங்களுக்கு சட்ட சிக்கல் மற்றும் செலவு அதிகரிக்கும்.
முறைகேடு செய்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து விசாரணை நடந்தது. இதன் அடிப்படையில் இந்திய ஐடி நிறுவனங்களுடன், மைக்ரோசாப்ட், அடோப் மற்றும் கேப் ஜெமினி ஆகிய நிறுவனங்களும் இத்திட்டத்தில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டன.
மைக்ரோசாப்ட் சர்ச்சை
2025ம் ஆண்டு தகுதியான அமெரிக்கா ஊழியர்கள் கிடைக்கவில்லை எனக்கூறி 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எச்1பி விசாக்களையும், 3,632 Perm விண்ணப்பங்களை மைக்ரோசாப்ட் பெற்றது.
அதே ஆண்டில் 6 ஆயிரம் அமெரிக்க ஊழியர்களை அந்நிறுவனம் பணி நீக்கம் செய்ததாக துணை அதிபர் ஜேடி வான்ஸ் குற்றம்சாட்டினார்.