ஜப்பான் செய்த கேலிக்கூத்தால் இந்திய MMA வீரர் வருண் சன்யால் உடற்தகுதி இழப்பு.. என்ன நடந்தது?
ஜப்பான் செய்த கேலிக்கூத்தால் இந்திய MMA வீரர் வருண் சன்யால் உடற்தகுதி இழப்பு.. என்ன நடந்தது?
நகோயா: ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கலப்பு தற்காப்புக் கலை (Mixed Martial Arts) விளையாட்டான எம்.எம்.ஏ பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட முன்னணி வீரர் வருண் சன்யால், உடல்நலக்குறைவு காரணமாக போட்டியிலிருந்து விலகி இருக்கிறார். ஜப்பானில் சரியான தங்குமிடம் ஒதுக்காததால் அவதிப்பட்ட வருண், போட்டியில் பங்கேற்கும் முன்பே மயங்கி விழுந்து இருக்கிறார்.
ஆடவருக்கான 77 கிலோ பாரம்பரிய எடைப் பிரிவில் பங்கேற்கவிருந்த 28 வயதான வருண் சன்யால், தனது உடல் எடையைக் குறைப்பதற்காக உணவு மற்றும் தண்ணீர் உட்கொள்வதைக் கணிசமாகக் குறைத்திருந்தார். இந்நிலையில் நீராவி குளியல் எடுத்த சிறிது நேரத்திலேயே அவருக்குக் கடுமையான தலைச்சுற்றல் மற்றும் தசைப்பிடிப்பு ஏற்பட்டது.
மருத்துவ பரிசோதனையில் அவரது உடலில் நீர்ச்சத்து குறைந்திருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு உப்பு கலந்த நீராகாரங்களை உட்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தினர். எனினும் போட்டியில் பங்கேற்க முடியாத அளவுக்கு உடல்நிலை பலவீனமடைந்ததால், அவர் உடற்தகுதியற்றவர் என அறிவிக்கப்பட்டு போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இதில் மற்றொரு சர்ச்சையும் ஏற்பட்டுள்ளது. ஜப்பானில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க சென்ற வீரர்களுக்கு சரியான தங்குமிடம் ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்திய வீரர்கள் மட்டுமின்றி மற்ற நாடுகளை சேர்ந்த வீரர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வருண் சன்யாலுக்கு 10 மணி நேர அலைக்கழிப்புக்கு பின் சொகுசு கப்பலில் அறை ஒதுக்கப்பட்டு இருந்தது. அந்த அறையை மேலும் இரண்டு இந்திய வீரர்களுக்கு ஒன்றாக ஒதுக்கி அடுத்த குளறுபடி நடந்தது.
அதனால் வருண் சன்யால் சரியான தூக்கம் மற்றும் தற்காப்பு கலை போட்டிகளுக்கு தேவையான உணவுகளை உட்கொள்ளாமல் அவதிப்பட்டதாக கூறியி இருந்தார். மேலும், ஜப்பானில் வீரர்களுக்கு வசதிகள் இல்லை என அவர் அதிருப்தியில் இருந்துள்ளார். அங்கு நீராவி குளியல் செய்து உடல்நலக் குறைவுக்கு ஆளாகி தற்போது பதக்க வாய்ப்பை இழந்துள்ளார்.
அவர் மயங்கி விழுந்த போது நேபாள வீரர் ஒருவர் தான் அவரை மருத்துவமனையில் சேர்த்ததாக கூறப்படுகிறது. அந்த அளவுக்கு ஜப்பானில் 2026 ஆசிய விளையாட்டு அரங்கில் குளறுபடிகள் அரங்கேறி வருகின்றன. இதுபோல இன்னும் எத்தனை வீரர்கள் சரியான தங்குமிடம் மற்றும் ஓய்வுக்கு தேவையான வசதிகள் இல்லாமல் அவதிப்படப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
வருண் சன்யால், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினரான சஞ்சீவ் சன்யாலின் மகன் ஆவார். லண்டன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர், சீனாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்று ஆசிய தரவரிசையில் 5-வது இடத்தைப் பிடித்த பலம் வாய்ந்த வீரராவார்.
வருணின் இந்தத் திடீர் விலகலால் ஆடவர் எம்.எம்.ஏ பிரிவில் இந்தியாவின் வாய்ப்பு பறிபோனது. எனினும், பெண்களுக்கான 60 கிலோ எடைப் பிரிவில் மங்கோலிய வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய சுச்சிகா தரியால் ஹூடா, இந்தியாவுக்கான பதக்கத்தை ஏற்கனவே உறுதி செய்துள்ளார்.