ஜோகூர் சாலையோரக் கடையை மோதிச் சென்ற சிங்கப்பூர் கார்
ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் உள்ள தாமான் செந்தோசாவில் உள்ள பிரபல சாலையோரக் கடையைச் சிங்கப்பூரில் பதிவான கார் ஒன்று மோதிச் சென்றதாகக் கூறப்படுகிறது. கடையின் மேசைகள், நாற்காலிகள் ஆகியவை சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இது வேண்டுமென்றே செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.
அதற்கு முன்னதாக அந்த காரின் ஓட்டுநர் அக்கடையில் இருந்த வாடிக்கையாளர் ஒருவரை நோக்கி இரும்புக் கம்பி ஒன்றை வீச முயன்றதாகக் கூறப்படுகிறது. ஆனால் அந்த வாடிக்கையாளர் காயமின்றி தப்பினார்.
சம்பந்தப்பட்ட ஆடவரை ஜோகூர் காவல்துறை தேடி வருகிறது.
திங்கட்கிழமை (செப்டம்பர் 28) அதிகாலை நிகழ்ந்தது இச்சம்பவத்தில் சந்தேக நபர் மதுபோதையில் இருந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
அபாயகரமான முறையில் காரை ஓட்டி, கடைக்குச் சொந்தமான பொருள்களை அந்த ஆடவர் சேதப்படுத்தியதைக் காட்டும் காணொளி இணையத்தில் வலம் வந்தது
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஆறு மாதச் சிறைத்தண்டனை, 2,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். அத்துடன், ஆபத்தான முறையில் காயம் விளைவிக்க முயன்றதற்காகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.