📅 Monday, 07 September 2026 IST | ஆவணி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News September 07, 2026 11:03 AM

"இந்தியாவை பார்த்து கத்துக்கோங்க".. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை விளாசிய முன்னாள் கேப்டன் மிஸ்பா

"இந்தியாவை பார்த்து கத்துக்கோங்க".. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை விளாசிய முன்னாள் கேப்டன் மிஸ்பா

"இந்தியாவை பார்த்து கத்துக்கோங்க".. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை விளாசிய முன்னாள் கேப்டன் மிஸ்பா

இஸ்லாமாபாத்: சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் இந்தியாவின் பிசிசிஐ-யுடன் ஒப்பிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை விமர்சித்து இருக்கிறார் அந்த அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக். இந்த விஷயத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், பிசிசிஐ-யிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறி இருக்கிறார்.

சமீபத்தில் லீட்ஸ் மற்றும் லண்டனில் இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்தது. இதனால் அதிருப்தி அடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 7 வீரர்கள், தலைமைப் பயிற்சியாளர் சர்பராஸ் அகமது மற்றும் உமர் குல் ஆகியோரை அதிரடியாக நீக்கியது. சர்பராஸுக்குப் பதிலாக மைக் ஹெசன் தற்காலிக பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த அவசர முடிவுகளால் அதிருப்தியடைந்த மிஸ்பா உல் ஹக் தனது தேர்வுக்குழு பதவியை ராஜினாமா செய்தார்.

இது குறித்துப் பேசிய மிஸ்பா உல் ஹக், "இந்தியா தனது கிரிக்கெட் கட்டமைப்பை மேம்படுத்த நீண்ட காலம் எடுத்துக்கொண்டது. 90-களுக்குப் பிறகு அவர்கள் முறையான திட்டமிடல் மற்றும் படிப்படியான முதலீடுகளைச் செய்து ஒரு நிலையான அணியை உருவாக்கினர். குறுகிய காலத்தில் அவசரமாக எடுக்கும் முடிவுகள் எதற்கும் தீர்வாகாது என்பதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புரிந்து கொள்ள வேண்டும்" என்று இந்தியாவை உதாரணமாகக் காட்டினார்.

மேலும், பாகிஸ்தான் இளம் வீரர்கள் அதிக அளவில் டி20 போன்ற வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். அவர்களுக்கு 4 நாட்கள் கொண்ட சிவப்புப்பந்து கிரிக்கெட்டில் போதிய அனுபவம் இல்லை. இதனால் டெஸ்ட் போட்டிகளில் அவர்கள் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் திணறுவதாக கவலை தெரிவித்தார்.

பாகிஸ்தானில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயிற்சியாளர்கள் இருவேறு விதமாக நடத்தப்படுவதாகவும் அவர் சாடினார். வெளிநாட்டு பயிற்சியாளர்களுக்கு கிரிக்கெட் வாரியம் மற்றும் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஒரு மென்மையான போக்கு உள்ளது என்றும், ஆனால் உள்ளூர் பயிற்சியாளர்கள் மட்டுமே கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்றும் மிஸ்பா உல் ஹக் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.