📅 Friday, 18 September 2026 IST | புரட்டாசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 18, 2026 12:33 PM

இந்திய வீராங்கனைக்கும், ஆண் பயிற்சியாளருக்கும் ஒரே அறை.. ஜப்பான் ஆசிய விளையாட்டு போட்டி சர்ச்சை

இந்திய வீராங்கனைக்கும், ஆண் பயிற்சியாளருக்கும் ஒரே அறை.. ஜப்பான் ஆசிய விளையாட்டு போட்டி சர்ச்சை

இந்திய வீராங்கனைக்கும், ஆண் பயிற்சியாளருக்கும் ஒரே அறை.. ஜப்பான் ஆசிய விளையாட்டு போட்டி சர்ச்சை

நகோயா: ஜப்பானின் நகோயா நகரில் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இந்திய வீரர், வீராங்கனைகள் தங்குவதற்கு அறை கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதில் உச்சக்கட்டமாக, இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை பிரணதி நாயக் மற்றும் அவரது ஆண் பயிற்சியாளர் அசோக் மிஸ்ரா ஆகிய இருவருக்கும் ஒரே அறையை அமைப்பாளர்கள் ஒதுக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீரர்கள் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சொகுசுக் கப்பலில் இவர்கள் இருவரும் தங்குவதற்குச் சென்றபோது இந்தக் குளறுபடி தெரியவந்தது. பெண் வீராங்கனையும் ஆண் பயிற்சியாளரும் ஒரே அறையில் தங்குவதா எனக் கூறி இருவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உள்ளூர் அமைப்பாளர்களிடம் உடனடியாகப் புகார் அளித்தும் பல மணி நேரம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்திய ஒலிம்பிக் சங்கம் நள்ளிரவில் அவசரமாகத் தலையிட்டது. அதன் பின்னரே நள்ளிரவு 1:30 மணியளவில் பயிற்சியாளருக்குத் தனியாக மற்றொரு அறை ஒதுக்கப்பட்டது. ஆனால் அத்துடன் சர்ச்சை முடியவில்லை. பயிற்சியாளர் அசோக் மிஸ்ரா தனது அறை சாவியை வாங்கச் சென்றபோது, அவரது பெயரில் முன்பதிவு இல்லை என விடுதி ஊழியர்கள் கூறினர். ஆவணங்களில் அவரது பெயரில் இருந்த 'I' என்ற எழுத்து விடுபட்டதே இந்தக் குழப்பத்துக்குக் காரணம். இந்த சிறிய எழுத்துப் பிழையைச் சரிசெய்து, ஆவணங்களை உறுதிப்படுத்த மேலும் 45 நிமிடங்கள் பிடித்தது. இதனால் அதிகாலை 2:00 மணிக்கு மேல்தான் அவர் தனது அறைக்குச் செல்ல முடிந்தது. இந்த நள்ளிரவுச் சம்பவத்தை பிரணதி நாயக்கும் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஏற்கனவே இந்திய கபடி அணியினரும் இதே போன்ற தங்கும் அறை குளறுபடிகளால் பல மணி நேரம் காத்திருந்தனர். உணவு மற்றும் பயிற்சி வசதிகளைப் பெறுவதிலும் இந்திய வீரர்களுக்குப் பல்வேறு சிக்கல்கள் நீடிக்கின்றன. போட்டிகள் தொடங்கும் முன்பே அரங்கேறும் இத்தகைய நிர்வாகக் குளறுபடிகள் இந்திய அணியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா மட்டுமின்றி பல நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகளும் இது போன்ற நிர்வாக குளறுபடிகளால் அறை இல்லாமல் சுற்றித் திரிந்ததாக பல்வேறு சமூக வலைதளப் பதிவுகள் வெளியாகி உள்ளன.