இந்திய அணியில் இடமில்லை.. உத்தரபிரதேச தேர்தலில் நிற்கும் முகமது ஷமி? மத்திய அமைச்சருடன் சந்திப்பு
இந்திய அணியில் இடமில்லை.. உத்தரபிரதேச தேர்தலில் நிற்கும் முகமது ஷமி? மத்திய அமைச்சருடன் சந்திப்பு
லக்னோ: உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, மத்திய அமைச்சரும் ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியின் தலைவருமான ஜெயந்த் சவுத்ரியை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பு அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
முகமது ஷமியுடன் இருக்கும் புகைப்படத்தை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தார். இதையடுத்து, கிரிக்கெட் களத்தில் இருந்து விடைபெற்று முகமது ஷமி தேர்தல் அரசியலில் களம் இறங்கப் போகிறாரா அல்லது அவரது மூத்த சகோதரர் ஹசீப் அரசியலில் அடி எடுத்து வைக்கப் போகிறாரா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
கடந்த 2025 மார்ச் 9 அன்று நியூசிலாந்துக்கு எதிராக சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் விளையாடிய ஷமி, அதன் பிறகு ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினாலும், பிசிசிஐ தேர்வுக்குழு அவரைத் தொடர்ந்து கண்டுகொள்ளாமல் புறக்கணித்து வருகிறது. இந்த விரக்தியே அவரை அரசியல் பக்கம் திருப்பியிருக்கலாம் என்று பேசப்படுகிறது.
2027 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் ஷமிக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலரும் கூறியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடருக்கான அணியில் ஷமி சேர்க்கப்படவில்லை. இதை அடுத்து அவர் அரசியல் கட்சி தலைவர் ஜெயந்த் சவுத்ரியை சந்தித்து இருப்பதால் கிரிக்கெட்டை விட்டு அரசியலுக்கு செல்லப் போகிறார் என்றே கூறப்படுகிறது.
முகமது ஷமியின் சொந்த ஊரான அம்ரோகா தொகுதியில் அவரை அல்லது அவரது குடும்பத்தினரைக் களமிறக்க ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சி திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது. அம்ரோகா தொகுதியில் உள்ள 3.25 லட்சம் வாக்காளர்களில், சுமார் 2 லட்சம் பேர் இஸ்லாமிய வாக்காளர்கள் ஆவர். இதில் ஷமியின் குடும்பம் சார்ந்த துருக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே சுமார் 70,000 பேர் உள்ளனர்.
தேர்தலில் போட்டியிடுவது குறித்து முகமது ஷமியோ அல்லது கட்சியோ இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. எனினும், சமாஜ்வாதி கட்சியின் செல்வாக்கு மிக்க அம்ரோகா தொகுதியில் அரங்கேறியுள்ள இந்த திடீர் அரசியல் சந்திப்பு தேசிய அளவில் உற்றுநோக்கப்படுகிறது.