IND vs WI: தெருவோர கிரிக்கெட்டையே மிஞ்சிய திலக், அக்சர்.. கொந்தளித்த கம்பீர்.. அடுத்தடுத்த ரன் அவுட்
IND vs WI: தெருவோர கிரிக்கெட்டையே மிஞ்சிய திலக், அக்சர்.. கொந்தளித்த கம்பீர்.. அடுத்தடுத்த ரன் அவுட்
இந்தூர்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் பொறுப்பற்ற முறையில் அடுத்தடுத்து அரங்கேறிய 2 மோசமான ரன் அவுட்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தின. சர்வதேச கிரிக்கெட்டா, இல்லை தெரு கிரிக்கெட்டா என நினைக்கும் அளவுக்கு இந்திய வீரர்கள் திலக் வர்மா, அக்சர் பட்டேல், அர்ஷ்தீப் சிங் செய்த காரியம் கடும் விமர்சனங்களைச் சந்தித்துள்ளது.
இந்தூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் அபிஷேக் சர்மா 69 ரன்கள் விளாசி வலுவான தொடக்கம் தந்தார். ஆனால் கடைசி 10 ஓவர்களில் நடுவரிசை வீரர்கள் வரிசையாக விக்கெட்களை இழந்ததால் இந்திய அணி 260 ரன் குவிக்க வேண்டிய பிட்ச்சில் 223 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் அக்சர் பட்டேல் மற்றும் திலக் வர்மா ரன் அவுட் மூலம் வெளியேறியது மிக மோசமான நிகழ்வாக இருந்தது.
17-வது ஓவரில் அக்சர் படேல் அடித்த பந்தை பவுண்டரி எல்லையில் நின்ற கமில் பூரன் டைவ் அடித்துத் தடுத்தார். ஆனால் அது பவுண்டரி சென்றுவிட்டது என நினைத்த திலக் வர்மாவும் அக்சர் படேலும் பிட்ச்சின் நடுவே நின்றுகொண்டு கைகளை முட்டி குதூகலித்துக் கொண்டிருந்தனர். பின்னர் பந்து இன்னும் களத்தில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்த அக்சர் ஓடிவந்து எப்படியோ கிரீசுக்குள் பேட்டை வைத்தார்.
ஆனால் துணை கேப்டன் திலக் வர்மா தவறை உணர்ந்து ஓடுவதற்குள் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பந்தை பவுலரிடம் வீசி அவரை 28 ரன்களில் ரன் அவுட் செய்தனர். சர்வதேச அரங்கில் அரங்கேறிய இந்த நகைப்புக்குரிய ரன் அவுட்டை பார்த்த தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அதிருப்தியில் கொந்தளித்தார்.
இந்தக் கூத்து முடிந்த அடுத்த சில நிமிடங்களிலேயே 19-வது ஓவரில் அடுத்த மோசமான ரன் அவுட் நடந்தது. அக்சர் அடித்த பந்து நேராக ஃபீல்டரிடம் சென்றது. அங்கு ஒரு ரன் கூட ஓட வழியில்லை. ஆனால் எதிர்முனையில் நின்ற அர்ஷ்தீப் சிங், பந்து எங்கே இருக்கிறது என்றே பார்க்காமல் ரன் ஓடி வந்தார். அக்சர் பட்டேல் பந்தை பார்த்துக் கொண்டு இருந்ததால் அர்ஷ்தீப் சிங்ஓடி வருவதை கவனிக்கவில்லை. அர்ஷ்தீப் பாதி தூரம் ஓடி வந்து விட்டதால் வேறுவழியின்றி ஓட முயன்ற அக்சர் படேல் 20 ரன்களில் ரன் அவுட்டானார்.
அப்போது அக்சர் பட்டேல் தனது கிரீசுக்கு ஓடிச் சென்று விட்டு அர்ஷ்தீப் சிங்கை ரன் அவுட் ஆக்கி இருக்க வேண்டும். அப்போது கடைசி நேரத்தில் ஒரு பேட்ஸ்மேன் களத்தில் இருந்து இருக்க முடியும். ஆனால், அர்ஷ்தீப் சிங் செய்த தவறுக்கு தானே சென்று இரையானார் அக்சர். இந்த மோசமான 2 ரன் அவுட்களால், 250 ரன்களைத் தாண்ட வேண்டிய இந்தியா 223 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.