இம்ரான் மகன்களை பேட்டி எடுத்ததால் இங்கிலாந்து வர்ணனையாளர்களை ஓரங்கட்டிய பாகிஸ்தான்.. என்ன நடந்தது?
இம்ரான் மகன்களை பேட்டி எடுத்ததால் இங்கிலாந்து வர்ணனையாளர்களை ஓரங்கட்டிய பாகிஸ்தான்.. என்ன நடந்தது?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதும் ஆடவர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான வர்ணனையாளர்கள் பட்டியலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சர்வதேச அளவில் கிரிக்கெட் வர்ணனையில் பெரும் ஆளுமைகளாகத் திகழும் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன்கள் மைக்கேல் ஆதர்டன் மற்றும் நாசர் ஹுசைன் ஆகியோர் இந்தப் பட்டியலில் இருந்து அதிரடியாகக் நீக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மகன்களை பேட்டி எடுத்ததே இவர்கள் நீக்கப்பட காரணம்.
கடந்த ஆகஸ்ட் மாதம் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் போது, இம்ரான் கானின் மகன்களான காசிம் மற்றும் சுலைமான் ஆகியோரை மைக்கேல் ஆதர்டன் ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி்காக 18 நிமிடங்கள் பேட்டி கண்டார். அதில், சிறையில் உள்ள தங்கள் தந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் பாகிஸ்தான் அதிகார வர்க்கம் அவரைப் படுகொலை செய்யத் துடிப்பதாக இம்ரானின் மகன்கள் கொந்தளித்தனர். இந்தப் பேட்டிக்கு பாகிஸ்தான் வாரியம் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர்களைக் களமிறக்காமல் புறக்கணிக்கப் போவதாகவும் மிரட்டியது. பாகிஸ்தான் அரசு தொலைக்காட்சியிலும் அந்தப் பேட்டிக்குத் தடை விதிக்கப்பட்டது.
இந்தப் பேட்டி குறித்து நாசர் ஹுசைனுடன் விவாதித்த ஆதர்டன், பாகிஸ்தான் நாட்டின் கிரிக்கெட் ஜாம்பவானான இம்ரான் கானின் அடையாளத்தையே அந்நாட்டு அரசு அழிக்கப் பார்க்கிறது எனக் கூறி தனது பேட்டியை நியாயப்படுத்தினார். கடந்த 2024-ல் இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் ஆடிய 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இவர்கள் இருவரும் வர்ணனையாளர்களாகப் பணியாற்றியிருந்த நிலையில், தற்போது ஏற்பட்ட அரசியல் மோதலின் காரணமாகவே இவர்கள் இருவரையும் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் அதிரடியாக ஓரங்கட்டியுள்ளது.
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 6 பேர் கொண்ட வர்ணனையாளர் குழுவில் பாகிஸ்தானின் வக்கார் யூனிஸ், ஆமிர் சோஹைல், பாசித் கான், உரூஜ் மும்தாஜ் ஆகியோருடன் இலங்கையின் ரோஷன் அபேசிங்கே மற்றும் இங்கிலாந்தின் மார்க் புட்சர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். ஜைனப் அப்பாஸ் தொகுப்பாளராகச் செயல்படுகிறார். அக்டோபர் 18 அன்று இந்த தொடர் தொடங்க உள்ளது. இரண்டாவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் அக்டோபர் 20 அன்று ராவல்பிண்டியில் மோதுகின்றன. இந்த தொடரின் இறுதிப் போட்டி அக்டோபர் 31 அன்று லாகூர் கடாபி மைதானத்தில் நடைபெற உள்ளது.