‘ஏஐ’ தளங்களின் நம்பகத்தன்மையைச் சோதித்துப் பார்க்கப் புதிய கருவி
மனிதர்களின் தலையீடு அதிகமின்றிச் செயல்படும் செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தளங்களின் பாதுகாப்பு அம்சத்தையும் நம்பகத்தன்மையையும் சோதித்துப் பார்க்க நிறுவனங்களுக்கு உதவுவதற்குப் புதிய கருவி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவுப் பாதுகாப்புச் சோதனைக் களமாக சிங்கப்பூரை உலகளவில் பெயர் பதிக்கச் செய்யும் முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அதன் தொடர்பில் வெளியிடப்பட்டுவரும் பல கருவிகள்/தளங்களில் இதுவும் அடங்கும்.
செயற்கை நுண்ணறிவுத் தளங்கள் கட்டுப்பாடின்றி தவறான செயல்களில் ஈடுபடுவதாகப் பல செய்திகள் வெளியாகிவரும் நிலையில் ஏஐ முறைகளின் பாதுகாப்பையும் நம்பகத்தன்மையையும் சோதிப்பதற்கான தொடக்க நடவடிக்கைக் கருவியைப் (Starter Kit for Testing Agentic Systems for Safety and Reliability) பற்றிய அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.
ஒரு செயற்கை நுண்ணறிவுத் தளம் திட்டமிடப்பட்ட பணியைச் சரிவரச் செய்து முடித்ததா, எப்படி அதைச் செய்தது ஆகியவற்றைப் புதிய கருவி சீரான கட்டமைப்பைக் கொண்ட அணுகுமுறையைப் பயன்படுத்தி சோதனையிடும் என்று தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை நிர்வாகி இங் செர் போங் புதன்கிழமை (அக்டோபர் 14) தெரிவித்தார்.