📅 Tuesday, 15 September 2026 IST | ஆவணி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology September 15, 2026 04:33 PM

ஏஐ பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒபாமா அழைப்பு; டிரம்ப்புக்குக் கண்டனம்

ஏஐ பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒபாமா அழைப்பு; டிரம்ப்புக்குக் கண்டனம்

நியூயார்க்: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சரியாக நிர்வகிக்கப்படாவிட்டால், அது பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.

ஏஐ பாதுகாப்பைக் கட்டுப்படுத்த கூட்டாட்சி சட்டங்களும் விதிகளும் தேவை என அவர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை (செப்டம்பர் 14) அறிக்கை வெளியிட்ட திரு ஒபாமா, “ஏஐ கொள்கை என்பது பொது விவாதத்தின் மையமாக இருக்க வேண்டும். கொள்கை வகுப்பாளர்கள் ஏஐ ஏற்படுத்தும் தாக்கத்தை முன்கூட்டியே கணித்து வேலை வாய்ப்புகள், பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும்,” என்று குறிப்பிட்டார்.

அமெரிக்க அதிபர் டோன்ல்ட் டிரம்ப்பின் ஏஐ அணுகுமுறையையும் திரு ஒபாமா விமர்சித்தார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக, முன்னணி ஏஐ மாதிரிகளை அரசாங்கத்தின் பார்வைக்கு முன்கூட்டியே நிறுவனங்கள் வழங்கவேண்டும் என்பதைத் திரு டிரம்ப் கட்டாயமாக்கவில்லை என்பதையும் ஒபாமா சுட்டிக்காட்டினார்.

“ஏஐயை பெட்டிக்குள் அடைத்து வைக்க முடியாது. ஆனால், ஏஐ எவ்வாறு உருவாக்கப்படுகிறது, பயன்படுத்தப்படுகிறது என்பதை நாம் கூட்டாகத் தீர்மானிக்க முடியும்,” என்று ஒபாமா கூறினார்.

முன்னணித் துறைத் தலைவர்களும் அதிநவீன மாதிரிகளின் வளர்ச்சியை மெதுவாக்குமாறு கோரிக்கை விடுத்து வரும் நிலையில் ஒபாமாவின் அறிக்கை வெளியாகியிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஏஐ குறித்த ஆபத்துகள் பற்றிய அச்சங்களை ஏமாற்று வேலை என நிராகரித்தும், அதன் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் எனக் கூறியும் டிரம்ப் சமூக ஊடகங்களில் தொடர்ச்சியான பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

பில் கேட்ஸ் கவலை

இந்நிலையில் செயற்கை நுண்ணறிவு சமுதாயத்திற்குக் கொண்டுவர உள்ள மாற்றங்களுக்கு உலகில் எந்த அரசாங்கமும் தயாராக இல்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஏஐ குறித்து நம்பிக்கையுடன் இருந்த திரு கேட்ஸ் தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார்.

வேலைகளுக்கான அச்சுறுத்தல்கள், பாதுகாப்பு பற்றிய கவலைகள், ஏஐ பயன்பாட்டிற்கு அடிமையாகும் ஆபத்துகள் குறித்து அவர் எச்சரித்து வருகிறார்.

“எந்தவொரு அரசாங்கமும் ஏஐ விவகாரத்தில் இருக்க வேண்டிய அளவுக்கு ஆழமான புரிதலோடு இருப்பதாக நான் நினைக்கவில்லை,” என்று அவர் கூறினார்.

உலகின் ஏழை மக்களுக்கு உதவி செய்ய ஏஐ தொழில்நுட்பத்திற்குப் பெரும் ஆற்றல் உள்ளது என்றும் திரு கேட்ஸ் தெரிவித்தார்.