சூட்கேஸில் பெண் உடல் மீட்கப்பட்ட வழக்கு; தலை எங்கே? ஆக்ரா போலீசாருக்கு கூடுவாஞ்சேரி காவல் துறை கடிதம்
சூட்கேஸில் பெண் உடல் மீட்கப்பட்ட வழக்கு; தலை எங்கே? ஆக்ரா போலீசாருக்கு கூடுவாஞ்சேரி காவல் துறை கடிதம்
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பெண்ணின் தலையை மொட்டை அடித்து நசுக்கி சூட்கேஸுக்குள் வைத்து ரயிலில் அனுப்பியதாக அவர்கள் தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
Published : September 4, 2026 at 4:17 PM IST
சென்னை: சூட்கேஸில் உடல் மீட்கப்பட்ட வழக்கில் தலை எங்கே? என கேட்டு ஆக்ரா போலீசாருக்கு கூடுவாஞ்சேரி போலீ'சார் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
தாம்பரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஹைதுல் நிஷா என்ற பெண் காணாமல் போனதாக அவரது மகன் அளித்த புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே ஆக்ரா ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேஸில் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் பெண்ணின் உடல் பாகங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சூட்கேஸில் சுற்றப்பட்டிருந்த தனியார் ஜவுளி நிறுவன கவரில் இருந்த முகவரியை அடிப்படையாகக் கொண்டு ஆக்ரா மற்றும் சென்னை போலீசார் இணைந்து தங்களின் விசாரணையை தமிழ்நாட்டில் தீவிரப்படுத்தினர். இதன் அடிப்படையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த 350 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், கூடுவாஞ்சேரியில் உள்ள ஒரு வீட்டை அடையாளம் கண்டனர்.
பூட்டப்பட்டிருந்த அந்த வீட்டை திறந்து சோதனை செய்தபோது பெண்ணின் மீதி உடல் பாகங்கள் பிரியாணி அண்டாவில் வைத்து வேக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த கொடூரக் கொலை தொடர்பாக அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மாணிக் உத்தின் லஸ்கர், அவரது மனைவி பகமதி மாஜி ஆகிய இருவரையும் கூடுவாஞ்சேரி தனிப்படை போலீசார் மணிப்பூர் மாநிலம் ஜிரிபாம் பகுதியில் வைத்து கைது செய்து, விமானம் மூலம் சென்னை அழைத்து வந்தனர்.
விசாரணையில், திருமணத்தை மீறிய உறவு தொடர்பான பிரச்சினையில் இந்த கொலை நடைபெற்றது தெரியவந்தது. ஹைதுல் நிஷா கர்ப்பமாக இருந்த நிலையில் வயது அதிகம் எனக் கூறி மாணிக் அவரை ஏற்க மறுத்ததாகவும், இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் அவர் போலீசாரிடமும், குடும்பத்தினரிடமும் தகவல் தெரிவிப்பதாக மிரட்டியதால் கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து கொலை நடந்த கூடுவாஞ்சேரி வீட்டிற்கு இருவரையும் போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அங்கு ஹைதுல் நிஷாவை எவ்வாறு கொலை செய்தனர் என்பதை குற்றவாளிகள் நடித்துக் காட்டினர். கொலைக்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் 2 கத்திகள் மற்றும் ஒரு கத்திரிக்கோலும் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் உடல் பாகங்கள் விரைவாக அழுகி நாற்றம் வீசாமல் இருப்பதற்காக யூடியூப் வீடியோக்களை பார்த்து வினிகர் பயன்படுத்தி உடல் பாகங்களை மூடி வைத்ததாக பகீர் கிளப்பும் வாக்குமூலம் அளித்தனர்.
இதன் தொடர்ச்சியாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இருவரையும் போலீசார் அழைத்துச் சென்றனர். தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சூட்கேஸை எங்கு வைத்தனர் என்பதை குற்றம்சாட்டப்ட்ட இருவரும் போலீசாரிடம் செய்து காட்டினர். குறிப்பாக ரயிலின் கழிவறை அருகே சூட்கேஸை ஓரமாக வைத்துவிட்டு அங்கிருந்து நடந்து சென்றதையும், பின்னர் பார்க் ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறிச் சென்றதையும் நடித்துக் காட்டினர்.
இந்த விசாரணைக்கு பிறகு பகமதி மாஜி மற்றும் மாணிக் உத்தின் லஸ்கர் ஆகிய இருவரையும் கூடுவாஞ்சேரி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே கூடுவாஞ்சேரியில் போலீசார் நடத்திய சோதனையில் பெண்ணின் உடலின் சில பாகங்கள் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேவேளையில் ஆக்ராவில் கைப்பற்றப்பட்ட சூட்கேஸில் மனித உடல் பாகங்கள் மட்டுமே இருந்ததாக அங்குள்ள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆக்ராவில் கைப்பற்றப்பட்ட உடல் பாகங்களும் கூடுவாஞ்சேரியில் மீட்கப்பட்ட உடல் பாகங்களும் ஒரே நபருடையதா என்பதை உறுதி செய்வதற்கு ஆக்ரா காவல்துறையினரிடம் உள்ள உடல் பாகங்களை கூடுவாஞ்சேரி போலீசாரிடம் ஒப்படைக்குமாறு அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த உடல் பாகங்கள் கிடைத்த பின்னர் அவற்றை கூடுவாஞ்சேரியில் மீட்கப்பட்ட உடல் பாகங்களுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்வதுடன் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் ஹைத்துல் நிஷாவுடன் தொடர்புடையதா என்பதை உறுதி செய்ய டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இந்த வழக்கில் இதுவரை கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் பெண்ணின் தலைப்பகுதி கண்டெடுக்கப்படாதது போலீசாருக்கு தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், ஆக்ரா காவல்துறையினர் கைப்பற்றிய சூட்கேஸில் தலைப்பகுதி இல்லை எனத் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் காணாமல் போன தலைப்பகுதி எங்கு உள்ளது? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆக்ராவில் கைப்பற்றப்பட்ட உடல் பாகங்கள் கூடுவாஞ்சேரி போலீசாரிடம் கிடைத்த பின்னரே அவற்றில் தலைப்பகுதி உள்ளதா? என்பதும் தெளிவாகும். உடல் பாகங்களின் டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் கிடைத்த பிறகு அவை ஹைதுல் நிஷாவின் உடல் பாகங்கள்தானா? என்பது உறுதி செய்யப்படும். அதன்பின்னர் வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.