’சுனாமி வந்து தலைமைச் செயலகம் அடித்துச் சென்றால் சுறா போல முதல்வர் தடுப்பாரா..?’
’சுனாமி வந்து தலைமைச் செயலகம் அடித்துச் சென்றால் சுறா போல முதல்வர் தடுப்பாரா..?’ - பெ. சண்முகம்
சென்னை பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பள்ளிகள், போக்குவரத்து நெரிசல், மீனவ மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அவர் எச்சரித்து, கடலை கைப்பற்றும் முயற்சியின் விளைவுகளை வரலாறு காட்டியதாக கூறினார். அரசாணை 564-ஐ திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சண்முகம் பங்கேற்று கண்டன உரையாற்றினார். புதிய தலைமைச் செயலகத்திற்கு வெளியிடப்பட்ட அரசாணை எண் 564 உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், “எந்தத் திட்டத்தை கொண்டு வந்தாலும் ஒரு சிலர் எதிர்பார்கள் என அமைச்சர் செங்கோட்டையன் பேசியுள்ளார். எல்லா திட்டத்தையும் எதிர்ப்பதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிடையாது. அமைச்சர் செங்கோட்டையனின் பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன்.
தலைமைச் செயலகம் போக்குவரத்து நெரிசல் இல்லாத, எல்லா அடிப்படை வசதிகளும் கொண்டதாக எதிர்கால வளர்ச்சியையும் அவசியமாகக் கொண்டு உருவாக்கப்பட வேண்டும் என்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எந்தவித மாறுபட்ட கருத்தும் கிடையாது. ஆனால் இப்பொழுது தேர்வு செய்த இடம் பொருத்தமற்ற இடம்.
பள்ளிகள் இருப்பதால் மாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் சாந்தோம் பகுதியில் ஏற்படுகிறது. ஒருவேளை பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் வந்தால் இங்கு உள்ள பள்ளிகளை காலி செய்வீர்களா?
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் என இங்குள்ள மக்களுக்கு புதிய நெருக்கடிகளை கொடுக்கிறீர்களே தவிர எந்தவித சாதகமான வாய்ப்புகளும் இல்லை.இங்குள்ள மீனவ மக்களை வேறு இடத்திற்கு மாற்றினால் மீனவ மக்களின் வாழ்வாதாரமான கடலை வேறு இடத்திற்கு கொண்டு செல்வீர்களா ?
புதிய அரசு, கடலை கையகப்படுத்த முயற்சி செய்த முன்பு இருந்த ஆட்சியாளர்களின் கதி என்ன ஆனது என்பதை வரலாற்றை தேடிப் படிக்க வேண்டும்.
கடற்கரைக்கு அருகிலேயே தான் தலைமைச் செயலகம் இருக்க வேண்டுமென அரசு நினைத்தால் பட்டினப்பாக்கத்தை தாண்டி சென்றால் All india radio அலுவலகம் 50 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. அந்த இடத்தை எடுத்துக் கொள்ளலாம் ஏனெனில் இப்போது யாரும் ரேடியோ கேட்டு நான் பார்ப்பதில்லை.
கடற்கரைக்கு அருகிலேதான் தலைமைச் செயலகம் வேண்டும் என்றால் all India radio அலுவலகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் டிஜிபி அலுவலகம் இருக்கிறது அதை எடுத்துக் கொள்ளுங்கள்.
கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானம், கோயம்பேடு பேருந்து நிலையம், All india radio என இத்தனை இடம் இருக்கும்போது மீனவ மக்களின் சொந்த இடத்தில் தான் தலைமைச் செயலகம் கட்டுவோம் என ஏன் அடம் பிடிக்கிறீர்கள்.
சுனாமி வந்து தலைமைச் செயலகம் அடித்துச் சென்றால் சுறா போல முதல்வர் தடுப்பாரா. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவோடு தான் அரசாங்கம் நடக்கிறது என்பதை மனதில் வைத்துக் கொண்டு அரசு செயல்பட வேண்டும் இல்லை தான்போன்றித்தனமாக அரசு செயல்படும் என்றால் வேறு விதமான முடிவை அரசு சந்திக்க நேரிடும்.
அனைத்து கட்சிகளோடு கலந்து பேசி ஒரு திட்டத்தை கொண்டு வருவது ஏன் முதல்வருக்கு வேப்பங்காய் போல கசக்கிறது. பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமையாது என்ற அறிவிப்பை, அரசாணையை முதலமைச்சர் வெளியிட வேண்டும்” என பேசியுள்ளார்.