சிங்கப்பூரின் காற்றுத் தரம்: ஆரோக்கியமற்ற நிலை நீடிக்கிறது
சிங்கப்பூரில் இரவு முழுவதும் ஆரோக்கியமற்ற நிலையில் புகைமூட்டம் நீடித்ததாக 24 மணிநேர காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு குறிப்பிட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 13) காலை நிலவரப்படி, மேற்கு வட்டாரத்தில் 24 மணிநேர காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 173ஆகப் பதிவானது.
மத்திய வட்டாரத்தில் அது 168ஆகவும், கிழக்குப் பகுதியில் 134ஆகவும் வடக்கில் 127ஆகவும் பதிவானது.
101லிருந்து 200க்கு இடைப்பட்டிருக்கும் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு ஆரோக்கியமற்ற நிலை என்று கருதப்படுகிறது.
தேசியச் சுற்றுப்புற அமைப்பு அக்டோபர் 12ஆம் தேதி வெளியிட்ட 24 மணிநேர முன்னுரைப்பில் சிங்கப்பூர் காற்றின் தரம் தொடர்ந்து ஆரோக்கியமற்ற நிலையில் நீடிக்கும் என்று கூறியது.
கலிமந்தானிலும் தென் சுமத்ராவிலும் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயிலிருந்து அடர்த்தியான புகை எழும்புவதைச் சுட்டிய அமைப்பு, தென்கிழக்குக் காற்றால் சிங்கப்பூரை நோக்கி அந்தப் புகை நகர்வதாகச் சொன்னது.
சிங்கப்பூரிலும் அதைச் சுற்றியுள்ள வட்டாரங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் தென் சுமத்ராவிலும் கலிமந்தானிலும் வறட்சி நீடிக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து சிங்கப்பூரின் காற்றுத் தரம் செப்டம்பர் 4ஆம் தேதி ஆரோக்கியமற்ற நிலையில் முதன்முறையாகப் பதிவானது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
அன்று மாலை தொடங்கி தேசியச் சுற்றுப்புற அமைப்பு ஒவ்வொரு நாள் மாலையும் புகைமூட்டம் குறித்த அறிக்கைகளை வெளியிட்டது.
இம்மாதம் 9ஆம் தேதி காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு அதன் உச்சத்தைத் தொட்டது.
மாலை 5 மணியிலிருந்து 8 மணிவரை மத்திய வட்டாரத்தில் தூய்மைக்கேட்டுக் குறியீடு 192ஆகப் பதிவானது.
இம்மாதம் 9ஆம் தேதி புகைமூட்டப் பணிக்குழு, காற்றின் தரம் மோசமான நிலையை எட்டினால் தகுதிபெறும் சிங்கப்பூரர்களுக்கு என்95 முகக்கவசங்களை வழங்கும் என்று குறிப்பிட்டது.