📅 Tuesday, 15 September 2026 IST | ஆவணி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 15, 2026 12:32 AM

சிங்கப்பூரின் இன நல்லிணக்கத்துக்குக் கூடுதல் பாதுகாப்பு: செப்.15 முதல் புதிய சட்டம்

சிங்கப்பூரின் இன நல்லிணக்கத்துக்குக் கூடுதல் பாதுகாப்பு: செப்.15 முதல் புதிய சட்டம்

இன நல்லிணக்கத்தைப் பேணுவதற்காகத் தற்போதுள்ள சட்டங்களை ஒருங்கிணைத்து, கூடுதல் பாதுகாப்புகளை வழங்கும் புதிய சட்டம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 15) முதல் நடப்புக்கு வருகிறது.

அதேவேளை, தற்போதைய ‘சமய நல்லிணக்கத்திற்கான அதிபர் மன்ற’த்துக்குப் பதிலாக, புதிய சட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட ‘இன மற்றும் சமய நல்லிணக்கத்திற்கான அதிபர் மன்றம்’ (PCRRH) தனது முதலாவது மூன்றாண்டு காலப் பணியைத் தொடங்குகிறது.

‘இன நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டம்’ கடந்த ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

சிங்கப்பூரின் இன நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையிலான உள்ளடக்கங்களை உருவாக்குவோருக்கு எதிராகத் தடை உத்தரவுகளைப் பிறப்பிக்க அந்தச் சட்டம் அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.

மேலும், சமூகச் சீரமைப்பு நடவடிக்கை என்னும் அம்சமும் இதில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இதன் மூலம், இன ரீதியாகச் சிறிய அளவிலான குற்றங்களைச் செய்வோர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, சமூக உறவுகளைப் புதுப்பித்துக்கொள்வதற்கான வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்படும்.

“இன நல்லிணக்கத்தைப் பாதுகாத்தல், புதிதாக உருவெடுக்கும் அச்சுறுத்தல்களைத் திறம்பட எதிர்கொள்ளுதல், தீங்கிழைக்கும் வெளிநாட்டுத் தாக்கங்களிலிருந்து சிங்கப்பூரின் பன்முகக் கலாசாரச் சமூகத்தைப் பாதுகாத்தல் ஆகியவற்றில் சிங்கப்பூர் கொண்டிருக்கும் ஆற்றலைப் புதிய சட்டம் வலுப்படுத்துகிறது,” என்று திங்கட்கிழமை (செப்டம்பர் 14) வெளியிடப்பட்ட உள்துறை அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

தற்போது அமலிலுள்ள சமய நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டே இந்தப் புதிய இன நல்லிணக்கச் சட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

சமய நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டம் தடை உத்தரவுகளைப் பிறப்பிக்க அதிகாரம் அளிப்பதோடு, இங்குள்ள சமயக் குழுக்கள் தலைமைத்துவக் கட்டுப்பாடுகளுக்குக் கீழ்ப்படியவும் வெளிநாட்டு நிதியுதவி மற்றும் வெளிநாட்டு அமைப்புகளுடனான தொடர்புகளை வெளிப்படுத்தவும் கட்டாயப்படுத்துகிறது.

புதிய சட்டத்தின்படி, இங்குள்ள ‘இனம் சார்ந்த அமைப்புகளாகக்’ குறிப்பிடப்பட்டுள்ள சுமார் 300 குலவழி மற்றும் வணிகச் சங்கங்கள் இதேபோன்ற விவரங்களை வெளிப்படுத்த வேண்டும்.

இது குறிப்பிட்ட அமைப்புகளுக்கு அவற்றின் அறிக்கை சமர்ப்பிப்புத் தேவைகள் குறித்த வழிகாட்டுதலை அச்சட்டம் வழங்கும் என்றும் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அவற்றின் முதல் அறிக்கை சமர்ப்பிப்பு 2028 ஏப்ரலில் இடம்பெறும்.

2025 பிப்ரவரியில் நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தின் போது பேசிய அன்றைய சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம், “புதிய அதிகாரங்களை அதிகாரிகள் எவ்வாறு பயன்படுத்துவார்கள் என்பதற்கு, 1990ல் இயற்றப்பட்ட சமய நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டத்தின் பயன்பாடே சிறந்த சான்று,” என்று குறிப்பிட்டிருந்தார்.

அப்போது வரை அந்தச் சட்டத்தின் கீழ் எந்தவொரு தடை உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்பதைக் குறிப்பிட்ட அமைச்சர், ஆனால் இந்தச் சட்டக் கட்டமைப்பு சிங்கப்பூரில் எது அனுமதிக்கப்படாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள உதவுகிறது என்றார்.