சிங்கப்பூர் வள்ளலார் விழா: கொல்லாமையின் மாண்பு
சிங்கப்பூரில் 38வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட வள்ளலார் விழா கேலாங் ஈஸ்ட் சிவன் கோவிலில் நடந்தேறியது.
19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திரு அருட்பிரகாச வள்ளலாரின் 204வது அவதார நாளின் நினைவாக அக்டோபர் 4ஆம் தேதி அவ்விழா நடைபெற்றது.
அவ்விழா சிங்கப்பூர் இந்து சபையின் ஆதரவோடு வள்ளலார் நற்பணி மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வள்ளலாரின் அருட்பாக்களுடனும், சிவனடியார்களின் திருமுறைப் பாடல்களுடனும் தொடங்கிய வழிபாட்டில் திரு காசி ராமன் திருவருட்பா பாடல்களைப் பாடினார்.
முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா. தினகரன் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.
ஈகை, கொல்லாமை, கருணை, புலனடக்கம் என வள்ளலார் போதித்து வாழ்ந்துகாட்டிய பண்புகளை எடுத்துரைக்கும் நாடகம் ஒன்றும் சிறாரால் நடித்துக் காட்டப்பட்டது. அத்துடன், தாய்மார்கள் இணைந்து வள்ளலாரின் பாடல்களுக்குக் கோலாட்டம் ஆடினர்.
‘வள்ளலாரின் சமயப் பொதுமை’ என்ற தலைப்பில் முனைவர் எம்.எஸ்.ஸ்ரீலட்சுமியும் மருத்துவம், சைவ உணவின் நன்மைகள் குறித்து மருத்துவர் சிவகுமாரும் உரையாற்றினர்.
நிகழ்ச்சியில் சிறுவர்களின் மேடைப் பேச்சு பற்றி இந்து சபையின் தலைவர் தி. ஜோதிநாதன் பெருமிதத்துடன் கூறினார். எந்த ஒரு தயக்கமும் தடையும் இன்றி, தடுமாறாமல் அவர்கள் மேடையில் தமிழில் பேசியது நெகிழ்ச்சியளித்ததாக அவர் சொன்னார்.