சிங்கப்பூர்: வீட்டில் நடந்த மானபங்கச் சம்பவங்கள்
சிங்கப்பூர் வீடுகளில் இவ்வாண்டின் முற்பாதியில் 227 மானபங்கச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
அவற்றுள் 38 விழுக்காட்டுச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டோர், 16 வயதுக்கும்கீழ் உள்ள பதின்ம வயதினர் என்று உள்துறை துணையமைச்சர் ஸுல்கர்னைன் அப்துல் ரஹிம் தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை (செப்டம்பர் 9) அல்ஜூனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சில்வியா லிம் நாடாளுமன்றத்தில் முன்வைத்த கேள்விக்குத் திரு ஸுல்கர்னைன் பதிலளித்தார்.
தங்களுக்கு இருந்த அதிகாரத்தையும் தங்கள்மீது இருந்த நம்பிக்கையையும் தவறாகப் பயன்படுத்தி மானபங்கம் செய்தோர் தொடர்பாக எத்தனை சம்பவங்கள் பதிவாகின என்றும் பாதிக்கப்பட்டோரில் எத்தனை பேர் 16 வயதுக்குக் கீழ் உள்ளோர் என்றும் சில்வியா கேள்வி எழுப்பினார்.
மானபங்கச் சம்பவங்களில் சம்பந்தப்பட்டோரில் எத்தனை பேர் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினர் என்பதைக் காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பதில்லை என்ற ஸுல்கர்னைன், விழிப்புணர்வை அதிகரிக்கவும் பாதிக்கப்பட்டோர் புகார் அளிப்பதை உறுதிசெய்யவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறினார்.
பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே அதிகரிக்க கல்வியமைச்சுடனும் பள்ளிகளுடனும் காவல்துறை இணைந்து செயல்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் இவ்வாண்டின் முற்பாதியில் 762 மானபங்கச் சம்பவங்கள் பதிவாகின. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அந்த எண்ணிக்கை 739ஆக இருந்தது.
வீடுகளைத் தவிர, பொதுப் போக்குவரத்து, பொதுப் பொழுதுப்போக்கு இடங்கள் ஆகியவற்றிலும் மானபங்கச் சம்பவங்கள் நேர்ந்தன.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
கடந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக 1,531 மானபங்கச் சம்பவங்களும் 2024ஆம் ஆண்டு 1,427 மானபங்கச் சம்பவங்களும் ஏற்பட்டன.
பெரும்பாலான மானபங்கச் சம்பவங்களில் மானபங்கம் செய்தோரும் பாதிக்கப்பட்டோரும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகியிருந்தனர்.
பாலியல் குற்றம் குறித்து காவல் நிலையங்களில் புகார் அளிப்போருக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதுடன் தனிப்பட்ட அறையில் அவர்களிடம் விசாரணை நடத்தப்படும்.