📅 Saturday, 03 October 2026 IST | புரட்டாசி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 02, 2026 05:03 PM

சிங்கப்பூர் பெண்களுக்கு மானிய விலையில் எச்பிவி9 தடுப்பு மருந்து

சிங்கப்பூர் பெண்களுக்கு மானிய விலையில் எச்பிவி9 தடுப்பு மருந்து

சிங்கப்பூரில் கருப்பை வாய்ப் புற்றுநோய்க்கு எதிராகத் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள விரும்பும் தகுதிபெறும் பெண்கள், அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து ‘கார்டசில் 9’ தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.

‘ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்’ (எச்பிவி) என்ற நோயிலிருந்து கூடுதலான பாதுகாப்பைத் தரும் அந்தத் தடுப்பு மருந்தைக் கழிவு விலையில் பெண்கள் போட்டுக்கொள்ளலாம்.

2027ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து உயர்நிலை 1, 2ல் பயிலும் மாணவிகளுக்கு எச்பிவி2 என்ற தடுப்பு மருந்துக்குப் பதிலாக எச்பிவி9 என்று அழைக்கப்படும் ‘கார்டசில் 9’ தடுப்பு மருந்து வழங்கப்படும்.

சிங்கப்பூரின் தேசிய தடுப்பு மருந்து அட்டவணை, மானியம் பெற்ற தடுப்பு மருந்துப் பட்டியலில் ‘கார்டசில் 9’ மருந்தும் சேர்க்கப்படுவதாகச் சுகாதார அமைச்சு, சுகாதார மேம்பாட்டு வாரியம், தொற்றுநோய் அமைப்பு ஆகியவை இணைந்து வெள்ளிக்கிழமை (அக்டோபர் 2) கூட்டறிக்கையை வெளியிட்டன.

இதன் மூலம், தகுதியுள்ள சிங்கப்பூர் பெரியவர்கள் எச்பிவி9 தடுப்பு மருந்தை 75 விழுக்காடு வரையிலான மானியத்தில் பெற முடியும்.

நிரந்தரவாசிகள் பலதுறை மருந்தகங்களில் அந்தத் தடுப்பு மருந்துக்கு மானியங்கள் பெறலாம்.

தகுதிபெறும் சிங்கப்பூர்ப் பிள்ளைகள் சாஸ் அட்டைகள் பயன்படுத்தப்படும் மருந்தகங்களிலும் பலதுறை மருந்தகங்களிலும் முழு மானியங்களைப் பெறலாம்.

9 வயதிலிருந்து 26 வயதுக்கு இடைப்பட்ட பெண்கள் எச்பிவி தடுப்பு மருந்தைப் போட்டுக்கொள்ளும்படி பரிந்துரைக்கப்படுகிறது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

9 வயதிலிருந்து 26 வயதுக்கு இடைப்பட்ட பெண்களுக்கான தேசியக் குழந்தைப் பருவத் தடுப்பு மருந்து அட்டவணையிலும் தேசியப் பெரியவர்களுக்கான அட்டவணையிலும் சேர்க்கப்படும் எச்பிவி9 தடுப்பு மருந்து, 90 விழுக்காட்டு கருப்பை வாய்ப் புற்றுநோய்க்கு காரணமான எச்பிவி நோயை எதிர்க்கும் ஆற்றல் கொண்டது.

இதற்கிடையே, ‘கார்டசில்’ என்று அறியப்படும் எச்பிவி4 தடுப்பு மருந்து தேசிய அட்டவணைகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளதால் சிங்கப்பூரில் இனி அது கிடைக்காது.

9 வயதிலிருந்து 14 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளைகள் எச்பிவி2 அல்லது எச்பிவி9 தடுப்பு மருந்தை முதல்முறை போட்டுக்கொள்ளும் பெண்கள் இரண்டு முறை அவற்றைப் போட்டுக்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது.