சிங்கப்பூர்: 391 கிலோ கஞ்சா கொண்ட கொள்கலன் பறிமுதல்
பாசிர் பாஞ்சாங் சோதனை நிலையத்தில் செப்டம்பர் 24ஆம் தேதி கொள்கலனில் வந்த 391 கிலோகிராமுக்கும் அதிகமான கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதாக குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையமும் மத்தியப் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவும் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 2) கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
ஆணையத்தின் முயற்சியால் அந்தக் கொள்கலன் அடையாளம் காணப்பட்டது.
சோதனையின்போது எடுக்கப்பட்ட படங்களில் முரண்பாடுகள் இருப்பதை ஆணையத்தின் உருவப் பகுப்பாய்வாளர்கள் கண்டதை அடுத்து கொள்கலனில் கூடுதல் சோதனைகள் நடத்தப்பட்டன.
அதிகாரிகள் நேரடியாக நடத்திய சோதனைகளில் கையுறைகள் அடங்கிய பெட்டிகளில் கஞ்சா வைக்கப்பட்டிருந்தாகச் சந்தேகிக்கப்படுகிறது.
உடனே மத்தியப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. கூடுதல் சோதனைகளுக்குப் பிறகு, கொள்கலனில் 391 கிலோகிராம் எடையுள்ள 1,290 கஞ்சா கட்டிகள் காணப்பட்டன.
முதற்கட்ட விசாரணையில் அந்தப் போதைப்பொருள் வேறொரு நாட்டிற்கு எடுத்துச்செல்வதற்காகச் சிங்கப்பூர் வழியாகக் கொண்டுசெல்லப்பட்டதாகத் தெரியவந்தது.
விசாரணை தொடர்கிறது.