📅 Thursday, 08 October 2026 IST | புரட்டாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 08, 2026 05:04 PM

சிங்கப்பூர் கிராண்ட் பிரீ: வெப்ப அபாயம் அறிவிப்பு

சிங்கப்பூர் கிராண்ட் பிரீ: வெப்ப அபாயம் அறிவிப்பு

சிங்கப்பூர் கிராண்ட் பிரீ போட்டிக்காகத் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ‘வெப்ப அபாயம்’ அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வார இறுதியில் மரினா பே கார் பந்தயத் தடத்தில் ஃபார்முலா 1 ஓட்டுநர்கள் கடுமையான சூழலை எதிர்கொள்ளவிருக்கின்றனர்.

போட்டி நடைபெறும் வார இறுதியில் வெப்பநிலை 31 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக இருக்கும் என்று அதிகாரபூர்வ வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதைத் தொடர்ந்து, ஸ்பிரிண்ட் மற்றும் பிரதான பந்தயம் ஆகிய இரண்டிற்கும் அனைத்துலக கார் பந்தயச் சம்மேளனத்தின் (எஃப்ஐஏ) ‘வெப்ப அபாய’ விதிமுறைகள் அமல்படுத்தப்படும் என்று போட்டி இயக்குநர் ரூய் மார்க்வெஸ், வியாழக்கிழமை (அக்டோபர் 8) அணிகளுக்கு அறிவித்தார்.

எஃப்1 போட்டி அட்டவணையிலேயே உடல்ரீதியாக மிகவும் சவாலானதாகக் கருதப்படும் இந்த வார இறுதியில், அதிகத் தீவிரம் கொண்ட மற்றொரு நிகழ்வாக ‘ஸ்பிரிண்ட்’ பந்தயமும் முதன்முறையாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

ஸ்பிரிண்ட் பந்தயம் அக்டோபர் 10ஆம் தேதியும், பிரதான பந்தயம் அக்டோபர் 11ஆம் தேதியும் நடைபெறும்.

இந்த அறிவிப்பின்படி, அதிக வெப்பத்தால் ஏற்படும் உடல் சோர்வு, ஆபத்தான அளவிலான உடல் வெப்பநிலையிலிருந்து ஓட்டுநர்களைப் பாதுகாக்க, அணிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தொழில்நுட்ப அமைப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.

பம்ப், குழாய் இணைப்புகள், வெப்பச் சேமிப்பு அமைப்பு உள்ளிட்ட பல பாகங்கள் இதில் அடங்கும். இவ்வமைப்பின் மூலம் உருவாக்கப்படும் குளிர்ந்த திரவம், பல்வேறு குழாய்களைக் கொண்ட சிறப்புத் தீத்தடுப்பு அங்கியை அணிந்திருக்கும் ஓட்டுநர்களுக்குச் செலுத்தப்படுகிறது.

இவ்வமைப்பின் முக்கியப் பாகங்கள் அனைத்தும் கார்களில் பொருத்தப்பட வேண்டும். இருப்பினும், அந்த அங்கியை அணிய வேண்டுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் உரிமை தற்போது ஓட்டுநர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான இரவு நேரப் பந்தயத்தில்தான், எஃப்ஐஏயின் வெப்ப அபாயம் தொடர்பான விதிமுறை முதன்முறையாகச் செயல்படுத்தப்பட்டது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

இதற்கிடையே, சிங்கப்பூரை தற்போது சூழ்ந்துள்ள புகைமூட்டம் மோசமடைந்தால், இந்த வார இறுதியில் நடைபெறவுள்ள சிங்கப்பூர் கிராண்ட் பிரீ பந்தயத்தின் மீது எந்தக் கட்டுப்பாடுகளும் இருக்காது. ஆனால், பொழுதுபோக்கு போன்ற வெளிப்புற நடவடிக்கைகளில் ‘சில கட்டுப்பாடுகள்’ விதிக்கப்படலாம் என்று எஃப்ஐஏ அக்டோபர் 8ஆம் தேதி தெரிவித்தது.

பந்தயம் நடைபெறவுள்ள வார இறுதிக்கு முந்தைய நாளான அக்டோபர் 8ஆம் தேதி வட்டார, வர்த்தக, மின்னிலக்க நாணயம், விளையாட்டுத் துறைத் தலைவர்கள் சிங்கப்பூரில் குவிந்துள்ள பரபரப்பான சூழலில், கடந்த சில வாரங்களாக இந்நாடு புகைமூட்டத்தால் சூழப்பட்டு, காற்றின் தரம் தற்போது ‘ஆரோக்கியமற்ற’ நிலையில் உள்ளது.