சிங்கப்பூர்: $20,000க்கு மேல் ரொக்கம் அறிவிக்காத 7 பேர் பிடிபட்டனர்
எல்லைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது 20,000 வெள்ளிக்கும் அதிகமான ரொக்கத்தை அதிகாரிகளிடம் அறிவிக்காமல் சிங்கப்பூருக்குள் கொண்டு வந்த குற்றத்துக்காக ஏழு பயணிகள் பிடிபட்டனர்.
செப்டம்பர் 22 முதல் 28 வரை ஏறத்தாழ ஒரு வார காலம் அந்தச் சோதனை நடத்தப்பட்டது. காவல்துறை, குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம், சிங்கப்பூர் சுங்கத்துறை ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் அந்தச் சோதனையில் ஈடுபட்டனர்.
கிட்டத்தட்ட 13,000 பயணிகளிடமும் 350 வாகனங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், 14,000க்கும் மேற்பட்ட பயணப் பெட்டிகளும் கைப்பைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவை ‘ஸ்கேன்’ செய்யப்பட்டன.
சிங்கப்பூரின் எல்லை தாண்டிய ரொக்கப் பரிமாற்ற அறிவிப்பு விதிமுறைகளை மீறுபவர்களையும் எல்லை தாண்டிய பிற குற்றங்களில் ஈடுபடுவோரையும் கண்டுபிடிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக அந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக திங்கட்கிழமை (அக்டோபர் 5) வெளியிட்ட கூட்ட அறிக்கையில் அந்த மூன்று அமைப்புகளும் குறிப்பிட்டிருந்தன.
பிடிபட்ட ஏழு பேரில் மூவருக்கு மொத்தம் $13,000 அபராதம் விதிக்கப்பட்டது. இருவருக்கு எச்சரிக்கைக் கடிதங்கள் வழங்கப்பட்டன. எஞ்சிய இருவரிடமிருந்து ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர்.
அறிவிக்கப்படாத ரொக்கத் தொகை $20,400 முதல் $51,000 வரை இருந்தது. அதில் அதிகபட்சத் தொகை செப்டம்பர் 23 அன்று 40 வயது வெளிநாட்டுப் பெண் பயணி ஒருவரிடம் இருந்தது கண்டறியப்பட்டது.
செப்டம்பர் 28ஆம் தேதி மட்டும் நால்வர் பிடிபட்டனர்; அவர்களிடமிருந்து கிட்டத்தட்ட $96,400 டாலர் மதிப்பிலான அறிவிக்கப்படாத ரொக்கம் கைப்பற்றப்பட்டது.
மொத்த மதிப்பு $20,000 அல்லது அதற்கு இணையான வெளிநாட்டு நாணய மதிப்பை சிங்கப்பூருக்குள் கொண்டு வரும்போதும் சிங்கப்பூரிலிருந்து கொண்டு செல்லும்போதும் அதுகுறித்து அதிகாரிகளிடம் அறிவிப்பது சட்டப்படி கட்டாயமாகும்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
அறிவிக்காமல் கொண்டு வரப்படும் பணம் பறிமுதல் செய்யப்படுவதோடு அதனைச் சட்டவிரோமாகக் கொண்டு வந்ததற்காக $50,000 வரை அபராதமும் மூன்றாண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.
அந்த எழுவர் தவிர, வரி செலுத்தப்படக்கூடிய பொருள்களை சிங்கப்பூருக்குள் கொண்டு வந்தபோது அதுபற்றி அறிவிக்காததற்காகவும் அவற்றுக்கான வரியைச் செலுத்தத் தவறியதற்காகவும் 60 பேர் பிடிபட்டனர். மொத்தம் $7,810 மதிப்புள்ள வரிகள் ஏமாற்றப்பட்டன. அந்தக் குற்றத்துக்காக $17,705 அபராம் விதிக்கப்பட்டது.