சிஎஸ்கே பிளேயிங் லெவனை சூதாட்டக்காரர்களுக்கு நான் வெளியிட்டேன்னா? வணிஷ் பேடி மறுப்பு
சிஎஸ்கே பிளேயிங் லெவனை சூதாட்டக்காரர்களுக்கு நான் வெளியிட்டேன்னா? வணிஷ் பேடி மறுப்பு
சென்னை: சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் ஒருவர், பணம் பெற்றுக்கொண்டு போட்டிக்கு முந்தைய பிளேயிங் 11 விவரங்களை கசியவிட்டதாக எழுந்த மேட்ச் பிக்சிங் புகார்களில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று டெல்லி கிரிக்கெட் வீரர் வான்ஷ் பேடி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
டெஹல்கா நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் ஒன்றில், முன்னாள் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வீரரான ரசித் பாட்டியா, ரகசிய நிருபரிடம் பேசும்போது, ஐபிஎல் 2025-இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஐந்து போட்டிகளின் பிளேயிங் 11 விவரங்களை டாஸ் போடுவதற்கு முன்பாகவே லண்டனைச் சேர்ந்த புக்மேக்கர்களுடன் ஸ்னாப்சாட் மூலம் பகிர்ந்து மேட்ச் பிக்சிங் செய்ததாகக் கூறியுள்ளார்.
இந்தத் தகவல் சென்னை அணியின் உள்ளே இருக்கும் ஒருவரால் தமக்கு வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.மேலும், டெல்லி பிரீமியர் லீக் தொடரிலும் பலமுறை இதுபோன்ற செயல்களில் தான் ஈடுபட்டதாக பாட்டியா தெரிவித்துள்ளார். டிபிஎல் பிளேயிங் 11 குறித்த அவர் கூறியது, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட அணியுடன் ஒத்துப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிஎஸ்கே கிரிக்கெட் வீரர் பற்றிய சில குறிப்புகள் சுருக்கமாக விவரிக்கப்பட்டிருந்தாலும், அவரது பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை. இதையடுத்து, பக்கத்து மாநிலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவர் தன்னை பிக்சிங் அணுகுமுறைக்காக தொடர்பு கொண்டது குறித்து வான்ஷ் பேடி தங்களிடம் தெரிவித்ததாகவும், அதனை பிசிசிஐ முறைப்படி தெரிவித்துள்ளதாகவும் டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
"என்னைப்பற்றி சமூக வலைதளங்களிலும் இணையதளங்களிலும் பரவி வரும் தவறான மற்றும் அவதூறான கருத்துகளுக்கு நான் விளக்கம் அளிக்க விரும்புகிறேன்," என்று வான்ஷ் பேடி சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார். "டெஹல்கா ஸ்டிங் ஆபரேஷனில் முன்னாள் ரஞ்சி கோப்பை வீரர் ரசித் பாட்டியா குறிப்பிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் நான் அல்ல என்பதையும், இதுபோன்ற எந்தவொரு செயலிலும் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்பதையும் நான் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது பெயரைக் கெடுக்கும் வகையில் இந்த அவதூறான புகார்களுடன் என்னை இணைக்க முயற்சிப்பவர்கள் மீது எனது சட்டக் குழு தகுந்த சிவில் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனவே, இதுபோன்ற தவறான செய்திகளைப் பரப்புவதை அனைவரும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்."
உத்தரகாண்ட் மாநிலம் அல்மோராவில் பிறந்த வான்ஷ் பேடி, சிறந்த கிரிக்கெட் வசதிகளைப் பெறுவதற்காக சிறுவயதிலேயே டெல்லிக்கு குடிபெயர்ந்தார். 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற டெல்லி பிரீமியர் லீக் தொடரில், ஈஸ்ட் டெல்லி ரைடர்ஸ் அணிக்கு எதிராக 41 பந்துகளில் 96 ரன்கள் குவித்து அனைவரையும் கவர்ந்தார். இதனால் 2025 ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை ₹55 லட்சத்திற்கு வாங்கியது. இருப்பினும், கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சீசனின் பாதியிலேயே அவர் விலக நேரிட்டதால், அவரால சிஎஸ்கே அணிக்காக அறிமுகப் போட்டியில் விளையாட முடியாமல் போனது. தொடர்ந்து ஐபிஎல் 2026 தொடருக்கு முன்னதாக சிஎஸ்கே நிர்வாகம் அவரை அணியில் இருந்து விடுவித்தது.