செயற்கை நுண்ணறிவின் நம்பகத்தன்மையை உயர்த்த வேண்டும்: ஜோசஃபின் டியோ
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பொதுமக்கள் அச்சமின்றித் தொடர்ந்து பயன்படுத்துவதற்குத் தேவையான நம்பகத்தன்மையைப் பற்றி தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ வியாழக்கிழமையன்று (செப்டம்பர் 17) கருத்து தெரிவித்துள்ளார்.
சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் பின்பற்றப்படுவதைப் போன்ற பல்வகை விதிமுறைகளும் தரநிலைகளும் கொண்ட பாதுகாப்பு ஒழுங்குமுறை எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவுக்கும் தேவைப்படலாம் என்றார் அவர்.
தற்காலத்தில் அதிநவீனச் செயற்கை நுண்ணறிவுக்கான பாதுகாப்பு நடைமுறைகள் இன்னும் உருப்பெற்று வருகின்றன என்றும் அவற்றுக்குக் கூடுதல் ஆராய்ச்சியும் சோதனைகளும் தேவைப்படுவதால் கால அவகாசம் பிடிக்கும் என்றும் அமைச்சர் டியோ தமது லிங்க்இன் வலைப்பதிவில் குறிப்பிட்டார்.
அதிவேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் மனிதக் கட்டுப்பாடு கைநழுவிப்போகும் அபாயம் உள்ளதை அவர் சுட்டினார்.
அது பேரளவிலான இணையத் தாக்குதல்களுக்கும் உயிரியல் பயங்கரவாதத்துக்கும் வழிவகுக்கும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.
செயற்கை நுண்ணறிவின் வேகத்தைக் குறைத்துப் பாதுகாப்பு நடைமுறைகள் மேம்பட அவகாசம் அளிக்க வேண்டுமா என்பது குறித்த விவாதங்கள் வலுத்து வரும் சூழலில் அமைச்சர் டியோவின் இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன.
சிவில் விமானப் போக்குவரத்துத் துறையை உதாரணமாகக் காட்டிய அமைச்சர் டியோ, பயணிகள் பாதுகாப்பாகச் சென்றடைவதை உறுதிசெய்யப் பேரளவிலான முயற்சிகள் தேவைப்படுவதைச் சுட்டிக்காட்டினார்.
விமான உற்பத்தி மற்றும் பராமரிப்பு முதல் வான்வெளி, விமான நிலைய நிர்வாகம் வரை ஆயிரக்கணக்கான விதிமுறைகளும் தரநிலைகளும் பின்பற்றப்படுவதாலேயே பயணிகள் பாதுகாப்பாகப் பயணம் செய்ய முடிகிறது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
விமான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்குச் சரியான முறையில் பயிற்சியளித்து பாதுகாப்பு நடைமுறைகளைத் தொடர்ச்சியாக அமல்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தகைய உத்தரவாதங்கள் இல்லையென்றால் பயணிகள், விமான ஊழியர்கள் விமானத்தில் பயணம் செய்யமாட்டார்கள் என்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையும் இந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்காது என்றும் அமைச்சர் டியோ கூறினார்.
“வருங்காலத்தில் செயற்கை நுண்ணறிவுத் துறைக்கும் இதுபோன்ற கட்டமைப்புகள் தேவைப்படும். அதற்குரிய கடினமான, நடைமுறைச் சாத்தியமான பணிகளை இப்போதே தொடங்க வேண்டும்” என்று அமைச்சர் டியோ வலியுறுத்தினார்.
சிங்கப்பூரைப் பொறுத்தமட்டில், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதோடு அதற்கான பாதுகாப்பு வழிமுறைகளையும் உருவாக்குவது அவசியம் என அவர் தெரிவித்தார்.
இதற்குச் செயற்கை நுண்ணறிவு முறைகளைச் சோதித்து உறுதிப்படுத்தும் வழிகளைக் கண்டறிதல், அதிநவீன மாதிரிகளை மதிப்பீடு செய்வதற்கான தொழில்நுட்ப ஆற்றலை வலுப்படுத்துதல் மற்றும் நிறுவனங்களுக்குப் பொறுப்பான பயன்பாடு குறித்த நடைமுறை வழிகாட்டுதல்களை வழங்குதல் ஆகியவை அடங்கும் என்றார் அவர்.