சென்னையில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த மெட்ரோ ரயில் சேவை
சென்னையில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த மெட்ரோ ரயில் சேவை - திருமுருகன் காந்தி விமர்சனம்
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு திமுக பங்களிப்பு செய்த நிலையில், தொடக்க விழாவுக்கு அக்கட்சியை அழைக்காதது தவறு என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்தார்.
Published : October 11, 2026 at 1:37 PM IST
சென்னை: கோயம்புத்தூர், மதுரை போன்ற முக்கிய நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை வழங்க மறுத்துவிட்டு, தற்போது சென்னையில் பிரதமர் மோடி மெட்ரோ ரயில் சேவையை கொடியசைத்துத் தொடங்கி வைப்பது வெட்கக்கேடானது என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், ரூ.13 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைப்பதற்கான பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக்.11) சென்னை வருகை புரிந்தார்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை தி.நகர் பெரியார் சிலை அருகே மே 17 இயக்கம் சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, பிரதமர் மோடிக்கு எதிராகக் கருப்புக்கொடிகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்
அப்போது, பல்கலைக்கழகங்களில் மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் VBSA மசோதா இருப்பதாக கண்டித்தும், தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்படுவதாகக் கூறியும், மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வு மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) ஆகியவற்றுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மேலும், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், கோவை மற்றும் மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டங்களை மறுப்பது, இந்தி திணிப்பு, நீட் தேர்வு உள்ளிட்ட விவகாரங்களைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமுருகன் காந்தி கூறுகையில், ”பிரதமர் மோடி இதுவரை 41 முறை தமிழ்நாட்டுக்கு வந்துள்ளார். அவற்றில் 26 முறை அரசியல் நிகழ்ச்சிகளுக்காக வந்துள்ளார். பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் மே 17 இயக்கம் சார்பில் கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றோம்.
தமிழ்நாடு விரும்பாத சட்டங்களை மாநிலத்தின் மீது திணிப்பது, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கான நிதியைத் தடுத்து நிறுத்துவது உள்ளிட்ட தமிழர் விரோத நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிங்க:இடைத்தேர்தலில் தவெக வெற்றிக்கு பாமக காரணமா? திருமாவளவன் பதில்
ஜாதி, மதங்களைக் கடந்து தமிழினத்தின் அடையாளமாக விளங்கும் திருவள்ளுவர் சிலைக்குக் காவிச் சாயம் பூசி பாஜகவினர் அவமதிக்கின்றனர். தமிழர்களின் நம்பிக்கைகள் மற்றும் அடையாளங்களில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, சென்னை மெட்ரோ ரயில் திட்டம் குறித்துப் பேசிய அவர், ”சுமார் ரூ.63,000 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டத்தில் ஒன்றிய அரசின் பங்களிப்பு சுமார் ரூ.7,000 கோடி முதல் ரூ.8,000 கோடி வரை மட்டுமே. மீதமுள்ள பெருந்தொகையைத் தமிழ்நாட்டு மக்கள் சார்பில் மாநில அரசு சொந்த நிதி மற்றும் கடன் வாயிலாகச் செலவிட வேண்டியுள்ளது.
கோயம்புத்தூர், மதுரை போன்ற முக்கிய நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டங்களை வழங்க மறுத்துவிட்டு, சென்னையில் மெட்ரோ திட்டத்தைத் தொடங்கி வைக்க பிரதமர் மோடி வருவது வெட்கக்கேடானது.
சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காகத் திமுக ஆட்சிக் காலத்தில் திட்டமிடப்பட்டு, ஒன்றிய அரசுடன் போராடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அத்தகைய திட்டத்தின் தொடக்க விழாவுக்கு திமுகவுக்கு அழைப்பு விடுக்காதது தவறு.
திட்டத்துக்கு எதிராக இருந்த மோடியை அழைக்க முடிகிறது. ஆனால், திட்டத்தைக் கொண்டுவந்து பங்களிப்பு செய்த திமுகவை அழைக்க முடியவில்லை. இதுபோன்ற நிகழ்ச்சிகளில் எதிர்க்கட்சித் தலைவரையும் அழைத்திருக்க வேண்டும்” என்றார்.
மேலும், டெல்லியில் ஜனநாயக முறையில் போராடும் மாணவர்கள் மீது காவல்துறையினர் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மூலம் அடக்குமுறைகள் நடத்தப்படுவதாகக் குற்றம்சாட்டிய அவர், இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்தார்.
SIR நடைமுறை மூலம் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறிய திருமுருகன் காந்தி, ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் போல மாணவர்களும் இளைஞர்களும் வீதிக்கு வந்து தங்களது உரிமைகளுக்காகப் போராட வேண்டிய காலம் வந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை மத்திய அரசு தொடரும் வரை, பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் மே 17 இயக்கம் சார்பில் கருப்புக்கொடி போராட்டம் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.