அவ்வை தமிழ் மையம் நடத்திய இலக்கியக் கருத்தரங்கில் 18 கட்டுரையாளர்கள் பங்கேற்பு
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், டல்லாஸ் பெருநகரப் பகுதியில் இயங்கிவரும் அவ்வை தமிழ் மையத்தின் சார்பில், “வாசகர் பார்வையில் பெருமாள் முருகன்” என்ற கருப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட டல்லாஸ் தமிழ் இலக்கியக் கருத்தரங்கம் 2026, அக்டோபர் 10ஆம் தேதி சனிக்கிழமை, ஆலன் நகரில் உள்ள காலின் கல்லூரியின் தொழில்நுட்ப வளாகத்தில் (Collin College Technical Campus) சிறப்பாக நடைபெற்றது.தமிழின் முக்கியமான சமகாலப் படைப்பாளிகளில் ஒருவரான எழுத்தாளர் பெருமாள் முருகன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இக்கருத்தரங்கம், ஒரு படைப்பாளியின் எழுத்துகளை வாசகர்களின் பார்வையில் அணுகி, திறனாய்வு செய்து, அவற்றைப் பற்றி எழுத்தாளருடனேயே நேரடியாக உரையாடுவதற்கான தனித்துவமான இலக்கியக் களமாக அமைந்தது.“வாசிப்போம் • திறனாய்வோம் • உரையாடுவோம்” என்ற முழக்கத்தை மையமாகக் கொண்டு நடைபெற்ற இக்கருத்தரங்கில், பெருமாள் முருகனின் நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் மற்றும் அவரது படைப்புலகின் பல்வேறு பரிமாணங்கள் குறித்து 18 கட்டுரையாளர்கள் தங்களுடைய வாசிப்பு அனுபவங்களையும் திறனாய்வுக் கருத்துகளையும் முன்வைத்தனர்.தமிழ்க் கல்வியிலிருந்து இலக்கியத் திறனாய்வை நோக்கி2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அவ்வை தமிழ் மையம், அமெரிக்காவில் வாழும் அடுத்த தலைமுறையினருக்குத் தமிழ் மொழியையும், தமிழர் பண்பாட்டையும், இலக்கிய மரபையும் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் ஓர் இலாப நோக்கற்ற கல்வி அமைப்பாகும்.Cognia கல்வித் தர அங்கீகாரம் பெற்றுள்ள இம்மையம், டல்லாஸ் பெருநகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் தமிழ்க் கல்வியை வழங்கி வருகிறது. தமிழைக் கற்பிப்பதுடன் நின்றுவிடாமல், தமிழ் வாசிப்பு, இலக்கியச் சிந்தனை, படைப்பாற்றல் மற்றும் பண்பாட்டு உரையாடல்களை வளர்க்கும் நோக்கத்துடன் இக்கருத்தரங்கை அவ்வை தமிழ் மையம் ஒருங்கிணைத்தது.ஒரு தமிழ்ப் பள்ளி, மொழிக் கல்வியின் எல்லைகளைக் கடந்து, சமகால இலக்கியம் குறித்த ஆழமான திறனாய்வுகளையும் அறிவார்ந்த உரையாடல்களையும் முன்னெடுக்கும் முயற்சியாக இந்நிகழ்வு அமைந்தது.மூன்று அமர்வுகள் - பதினெட்டு வாசகர் பார்வைகள்பெருமாள் முருகனின் படைப்புலகை மூன்று முக்கியமான கருப்பொருள்களின் அடிப்படையில் அணுகும் வகையில் கருத்தரங்கம் வடிவமைக்கப்பட்டிருந்தது.முதல் அமர்வு: நிலம் • மக்கள் • வாழ்க்கைபெருமாள் முருகனின் படைப்புகளில் இடம் பெறும் கொங்கு நிலப்பரப்பு, கிராமிய வாழ்வியல், இயற்கை, விவசாயம், மனித உறவுகள் மற்றும் எளிய மக்களின் வாழ்க்கைப் போராட்டங்கள் குறித்து இவ்வமர்வில் ஆராயப்பட்டது.ராஜு பாஸ்கர், காசிராஜன், ஆனந்தலட்சுமி கார்த்திக், ஸ்வர்ணபார்வதி, பூபாலன், பாலாஜி ஆகியோர் மாதொருபாகன், ஏறுவெயில், அர்த்தநாரி, ஆலவாயன், பூனாச்சி உள்ளிட்ட படைப்புகளையும், உனக்கு என்ன வேணுமய்யா? சிறுகதையையும் பல்வேறு வாசகர் பார்வைகளில் அணுகினர்.இரண்டாவது அமர்வு: சமூகம் • உடல் • அதிகாரம்சாதி, பாலினம், குடும்ப உறவுகள், சமூகக் கட்டுப்பாடுகள், தனிமனித விருப்பங்கள், கல்வி மற்றும் கருத்துரிமை ஆகியவை இலக்கியப் படைப்புகளில் எவ்வாறு வெளிப்படுகின்றன என்பது இவ்வமர்வின் மையமாக அமைந்தது.லலிதா அன்பு, அருள்மொழி, ராஜஸ்ரீ கண்ணன், நிலா ஜெயப்பிரியா ஆகியோர் பெருமாள் முருகனின் படைப்புகளில் இடம்பெறும் சமூக முரண்பாடுகள், பெண்களின் வாழ்க்கை, அதிகார உறவுகள், கல்விமுறை மற்றும் படைப்புச் சுதந்திரம் குறித்து தங்களுடைய திறனாய்வுகளை முன்வைத்தனர். குறிப்பாக, மாதொருபாகன், கழிமுகம் உள்ளிட்ட படைப்புகள் சமூக அமைப்புகளுக்கும் தனிமனித வாழ்க்கைக்கும் இடையிலான சிக்கல்களை எவ்வாறு வெளிப்படுத்துகின்றன என்பது விவாதிக்கப்பட்டது.மூன்றாவது அமர்வு: மொழி • படைப்பு • கருத்துரிமைபெருமாள் முருகனின் மொழிநடை, கொங்கு வட்டாரச் சொல்வளம், சிறுகதைப் படைப்பாக்கம், நையாண்டி, கருத்துரிமை, இலக்கிய அனுபவம் மற்றும் மொழிபெயர்ப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு மூன்றாவது அமர்வு நடைபெற்றது.நர்மதா புனிதவேலு, நா. கணேசன், சேதுராமன் ராஜேந்திரன், விக்டர் லூயிஸ், இமயவரம்பன் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பல்வேறு கோணங்களில் தங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.குறிப்பாக, பெருமாள் முருகனின் எழுத்துகளில் வட்டார மொழியின் தனித்துவம், படைப்பாளியின் கருத்துரிமை, இலக்கியப் படைப்புகளின் மொழிபெயர்ப்பு அனுபவங்கள் ஆகியவை கவனத்திற்குரிய விவாதங்களாக அமைந்தன.கருத்தரங்கின் முத்தாய்ப்பாக, எழுத்தாளர் பெருமாள் முருகனின் ஆறு படைப்புகளை இந்தி மொழியில் மொழிபெயர்த்துள்ள கவிஞரும் எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான மோகன் வர்மாவின் ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கத்தை சௌந்தர் வாசித்தார்.பெருமாள் முருகனின் படைப்புகள் தமிழ் மொழியின் எல்லைகளைக் கடந்து பிற இந்திய மொழிகளின் வாசகர்களையும் சென்றடைவதற்கு மொழிபெயர்ப்புகள் ஆற்றிவரும் முக்கியப் பங்களிப்பை எடுத்துக்காட்டும் வகையில் இந்நிகழ்வு அமைந்தது.ஒரு தமிழ் எழுத்தாளரின் படைப்புகளைப் பிறமொழி வாசகர்களிடம் கொண்டு சேர்த்த மொழிபெயர்ப்பாளரின் பார்வையும் இக்கருத்தரங்கில் இடம்பெற்றது, நிகழ்வின் இலக்கியப் பரப்பை மேலும் விரிவுபடுத்தியது.கருத்தரங்கின் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற சிறப்புரையில், எழுத்தாளர் பெருமாள் முருகன் தனது படைப்புகளின் உலகளாவிய பயணம் குறித்து உரையாற்றியதுடன், முக்கியமான புதிய பதிப்பு ஒப்பந்தத் தகவல் ஒன்றையும் அறிவித்தார். ஜெர்மனியின் பிராங்க்பர்ட் சர்வதேசப் புத்தகக் கண்காட்சியில், தனது 'பூனாச்சி' நாவலைப் பிரெஞ்சு மொழியில் வெளியிடுவதற்கான ஒப்பந்தம் முடிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த நூல் 2027 அல்லது 2028ஆம் ஆண்டுக்குள் பிரெஞ்சு மொழியில் வெளிவரும் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.ஏற்கெனவே பிரான்சின் முன்னணிப் பதிப்பகமான காலிமார் (Gallimard) வெளியிட்ட 'மாதொருபாகன்' நாவல், அந்தப் பதிப்பகத்தின் மொழிபெயர்ப்பு இலக்கிய வரிசையில் தமிழ் மொழிக்கு இடமளித்த முக்கியமான படைப்பாக அமைந்ததாக அவர் குறிப்பிட்டார்.தமிழ் நூல்களை உலகப் பதிப்பகங்களுக்குக் கொண்டு செல்வதற்காகக் காலச்சுவடு பதிப்பாளர் கண்ணன் மேற்கொண்ட நீண்டகால முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.தமிழ் இலக்கியத்தின் பெருமையை அதன் தொன்மையில் மட்டுமே தேடாமல், சமகாலத் தமிழ் வாழ்க்கையை உலக வாசகர்களிடம் கொண்டு செல்லும் நவீன இலக்கியத்தின் ஆற்றலையும் உணர வேண்டும் என்று வலியுறுத்தினார். தொடர்ந்து, தமது படைப்புகளின் பின்னணியாக அமைந்த கொங்குநாட்டின் நில அமைப்பு, முல்லைத்திணை வாழ்வியல், விவசாயம், மேய்ச்சல் தொழில், பெண்களின் உழைப்பு மற்றும் சமூக மாற்றங்கள் குறித்து விரிவாகப் பேசினார்.தனது படைப்புகள் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பின் வாழ்க்கையைப் பதிவு செய்தாலும், அவற்றில் இடம்பெறும் மனித உறவுகளும் உணர்வுகளும் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் வாசகர்களுடன் தொடர்பை ஏற்படுத்துகின்றன என்பதை எடுத்துரைத்தார்.கருத்தரங்கில் வாசகர்கள் முன்வைத்த திறனாய்வுகள் தமக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் வியப்பையும் அளித்ததாகவும், வழக்கமான ஆய்வுக் கருத்தரங்குகளிலிருந்து மாறுபட்டு, வாசகர்கள் தங்களுடைய சொந்த அனுபவங்களின் அடிப்படையில் படைப்புகளை அணுகியிருப்பது சிறப்பானது என்றும் பாராட்டினார். தமிழின் நவீன இலக்கிய வாசிப்பை வளர்ப்பதற்கும், தமிழ் நூல்களை உலக மொழிகளுக்குக் கொண்டு செல்வதற்கும் இதுபோன்ற இலக்கியக் கருத்தரங்குகள் முக்கியமானவை என்பதையும் அவரது உரை வலியுறுத்தியது.தமிழ் இலக்கியத்திற்கு எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆற்றியுள்ள பங்களிப்பையும், தமிழ் மண்ணின் வாழ்வியலை உலக வாசகர்களிடம் கொண்டு சேர்த்துள்ள அவரது படைப்புப் பயணத்தையும் பாராட்டும் வகையில், அவ்வை தமிழ் மையத்தின் சார்பில் அவருக்குச் சிறப்பு செய்யப்பட்டது. தமிழின் வட்டார மொழிகளையும், எளிய மனிதர்களின் வாழ்வியலையும், சமூகத்தின் பல்வேறு முரண்பாடுகளையும் இலக்கியத்தின் மையத்திற்குக் கொண்டு வந்துள்ள அவரது படைப்புப் பணிக்கு மரியாதை செலுத்தும் வகையில் நினைவுப் பாராட்டுப் பட்டயம் வழங்கப்பட்டது.புத்தகக் கண்காட்சியும் வாசகர் சந்திப்பும்கருத்தரங்கின் ஒரு பகுதியாக பெருமாள் முருகனின் தமிழ் நூல்கள் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்கள் இடம்பெற்ற புத்தகக் கண்காட்சியும் நடைபெற்றது.நிகழ்வின் நிறைவில் நடைபெற்ற புத்தகக் கையொப்ப நிகழ்வு, வாசகர்கள் எழுத்தாளரை நேரில் சந்திப்பதற்கான வாய்ப்பாக அமைந்தது.புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தில் தமிழ் மொழியைக் கற்பித்தல், பண்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்துதல் ஆகியவற்றுடன், தீவிரமான இலக்கிய வாசிப்பையும் திறனாய்வையும் வளர்த்தெடுப்பதன் அவசியத்தை இக்கருத்தரங்கம் முன்னிறுத்தியது. ஒரு எழுத்தாளரைப் பாராட்டுவதோடு மட்டும் நின்றுவிடாமல், அவரது படைப்புகளைப் பல்வேறு கோணங்களில் அணுகி, உடன்பாடுகளையும் முரண்பாடுகளையும் அறிவார்ந்த முறையில் விவாதிப்பதற்கான மேடையாக இந்நிகழ்வு அமைந்தது.தமிழ் இலக்கியம் தமிழ்நாட்டின் புவியியல் எல்லைகளுக்குள் மட்டும் இயங்குவதில்லை; உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் வாசகர்களின் அனுபவங்களோடும் சிந்தனைகளோடும் தொடர்ந்து உரையாடுகிறது என்பதையும் இம்முயற்சி எடுத்துக்காட்டியது.கருத்தரங்கின் நிறைவில், எழுத்தாளர் பெருமாள் முருகன், கட்டுரையாளர்கள், அமர்வு நெறியாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், தன்னார்வலர்கள், நிகழ்விற்கு ஆதரவளித்த அமைப்புகள் மற்றும் கலந்துகொண்ட வாசகர்கள் அனைவருக்கும் அவ்வை தமிழ் மையத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.“ஒரு நல்ல இலக்கியக் கருத்தரங்கின் நிறைவு என்பது உரையாடலின் முடிவல்ல; புதிய வாசிப்புகளின் தொடக்கம்” என்ற சிந்தனையுடன் நிகழ்வு நிறைவடைந்தது.தமிழ்க் கல்வியையும் இலக்கிய வாசிப்பையும் இணைத்து, புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தில் ஆழமான இலக்கியச் சிந்தனையை வளர்க்கும் முயற்சியில், டல்லாஸ் தமிழ் இலக்கியக் கருத்தரங்கம் 2026 ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைந்துள்ளது.- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்