ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான தொடர்.. ஹர்திக் பாண்டியா, சாய் சுதர்சன் இந்திய அணியில் தேர்வு
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான தொடர்.. ஹர்திக் பாண்டியா, சாய் சுதர்சன் இந்திய அணியில் தேர்வு
மும்பை: ஹர்திக் பாண்டியா அடுத்த மாதம் மீண்டும் போட்டி கிரிக்கெட்டுக்கு திரும்ப உள்ளார். கடந்த 2026 ஐபிஎல் தொடரில் கடைசியாக விளையாடிய 32 வயதான ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்தியா ஏ அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இருப்பினும், அவரது உடற்தகுதியைப் பொறுத்தே அவர் இப்போட்டிகளில் பங்கேற்பது உறுதியாகும்.
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான தொடருக்கான இந்தியா ஏ அணிகளை பிசிசிஐ அறிவித்துள்ளது. புதுச்சேரியில் நடைபெறவுள்ள இரண்டு அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளுக்கு கர்நாடகாவின் இடதுகை பேட்டர் தேவ்தத் படிக்கல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் இலங்கையில் அடுத்தடுத்து சதங்கள் குவித்து அசத்திய படிக்கல், ஒருநாள் அணியிலும் இடம் பெற்றுள்ளார். அவர் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான ஒருநாள் அணியின் துணை கேப்டனாகவும் செயல்படுவார்.
காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை தவறவிட்ட தமிழகத்தின் இடதுகை பேட்டர் சாய் சுதர்சன், இரண்டு அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் படிக்கல்லின் துணை கேப்டனாக செயல்படுவார்.
ஆந்திராவின் ஷேக் ரஷீத், ஹரியானாவின் அன்ஷுல் கம்போஜ் மற்றும் ஐபிஎல் 2026 இல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி கவனம் ஈர்த்த விதர்பாவின் பிரபுல் ஹிங்கே ஆகியோரும் டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
ஒருநாள் தொடருக்கான அணியில் ஹர்திக் பாண்டியா, ருதுராஜ் கெய்க்வாட், தேவ்தத் படிக்கல், சாய் சுதர்சன் ஆகியோருடன் ராஜத் படிதார், பிரியன்ஷ் ஆர்யா, நமன் தீர், பிரப்சிம்ரன் சிங் ஆகியோரும் ஹரியானா ஆல்ரவுண்டர் நிஷாந்த் சிந்து, உத்தரபிரதேசத்தின் விப்ராஜ் நிகம் மற்றும் தமிழகத்தின் குர்ஜப்நீத் சிங் ஆகியோருடன் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையிலான இரண்டு அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகள் செப்டம்பர் 22 முதல் 25 வரையிலும், செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 2 வரையிலும் புதுச்சேரியில் நடைபெறவுள்ளன. அதே மைதானத்தில் அக்டோபர் 6, 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் மூன்று ஒருநாள் போட்டிகளும் நடைபெற உள்ளன.
இந்தியா ஏ டெஸ்ட் அணி: தேவ்தத் படிக்கல் (கேப்டன்), சாய் சுதர்சன் (துணை கேப்டன்), அமன் மோக்டே, ஆயுஷ் பாண்டே, யாஷ் ரத்தோட், ஷேக் ரஷீத், குமார் குஷாக்ரா (விக்கெட் கீப்பர்), ஷம்ஸ் முலானி, தனுஷ் கோடியன், துஷார் தேஷ்பாண்டே, அன்ஷுல் கம்போஜ், பிரபுல் ஹிங்கே, என் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), நச்சிகேத் பூதே, வைஷாக் விஜய்குமார்.
இந்தியா ஏ ஒருநாள் அணி: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), தேவ்தத் படிக்கல் (துணை கேப்டன்), பிரியன்ஷ் ஆர்யா, சாய் சுதர்சன், ராஜத் படிதார், குமார் குஷாக்ரா (விக்கெட் கீப்பர்), நிஷாந்த் சிந்து, விப்ராஜ் நிகம், அர்ஷின் குல்கர்னி, அர்ஷத் கான், நமன் தீர், ஹர்திக் பாண்டியா*, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), குர்ஜப்நீத் சிங், யாஷ் தாக்கூர்.