‘ஆர்டிஎஸ்’ சேவை செயல்பாடு: சிங்கப்பூர்
ஜோகூர் பாரு: ஜோகூர் பாரு-சிங்கப்பூர் அதிவிரைவு (ஆர்டிஎஸ்) ரயில் சேவை 2027 ஜனவரி 1ஆம் தேதி தொடங்கப்பட உள்ள நிலையில், எல்லையோரச் சம்பவங்களை எதிர்கொள்வது குறித்து இருநாடுகளும் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 29) கூட்டுச் சோதனையை மேற்கொண்டன.
ரயில் சேவையின் தடையற்ற இயக்கத்தை உறுதிசெய்யவும், எதிர்பாராத அவசரகாலச் சம்பவங்களைச் திறம்படக் கையாளவும் இரு தரப்பும் பயிற்சியில் ஈடுபட்டன.
மலேசிய தேசியப் பாதுகாப்பு மன்றமும், சிங்கப்பூரின் குடிநுழைவுச் சோதனைச்சாவடி ஆணையமும் (ஐசிஏ) இணைந்து நடத்திய பயிற்சியில், இருநாட்டு முகமைகளுக்கிடையிலான ஒருங்கிணைப்பு, தகவல்தொடர்பு, அவசரகாலச் செயல்பாடுகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
பயிற்சியின் மூலம், எல்லை தாண்டிய சம்பவங்களைக் கையாளுவதற்காக இருநாடுகளாலும் கூட்டாக உருவாக்கப்பட்டுள்ள ஏழு நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் பரிசோதிக்கப்பட்டு உறுதிசெய்யப்பட்டன.
ரயிலின் பயணம் நிறைவுறும்போதும், இருநாடுகளின் எல்லைப் பகுதிகளில் அல்லது 17 மீட்டர் எல்லைப் பரப்பிற்குள்ளோ பழுதாகி நிற்கும்போதும், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த வழிகாட்டுதல்கள் தெளிவாக வரையறுக்கின்றன.
மேலும், இருநாட்டு அவசரகாலப் பணியாளர்களின் எல்லை தாண்டிய கட்டுப்படுத்தப்பட்ட செயல்பாடு, பரஸ்பர உதவிகளுக்கும் இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஜோகூர் மாநிலக் காவல் துறைத் தலைவர் ரஹ்மான் அர்சாத் நிறைவு விழாவில் கலந்துகொண்டார்.
ஜோகூர் பாருவின் புக்கிட் சாகாரையும் சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் நார்த்தையும் இணைக்கும் ஆர்டிஎஸ் ரயில் சேவை, இருநாடுகளுக்கும் இடையிலான இருவழிப் போக்குவரத்தையும் மக்களின் இணைப்புத் திறனையும் பெருமளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.