📅 Sunday, 27 September 2026 IST | புரட்டாசி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News September 26, 2026 06:08 PM

ஆசிய போட்டி 2026: ஸ்குவாஷ் ஒற்றையர் பிரிவில் இந்திய ஆடவர், மகளிர் சாதனை.. 2 பதக்கம் உறுதி

ஆசிய போட்டி 2026: ஸ்குவாஷ் ஒற்றையர் பிரிவில் இந்திய ஆடவர், மகளிர் சாதனை.. 2 பதக்கம் உறுதி

ஆசிய போட்டி 2026: ஸ்குவாஷ் ஒற்றையர் பிரிவில் இந்திய ஆடவர், மகளிர் சாதனை.. 2 பதக்கம் உறுதி

நகோயா: ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய ஸ்குவாஷ் நட்சத்திரங்களான அனாஹத் சிங் மற்றும் அபய் சிங் ஆகியோர் தங்களது விளையாட்டுகளில் அபாரமான வெற்றிகளைப் பதிவு செய்து, ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

ஜப்பானின் நகோயாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்தியாவின் 18 வயது இளம் வீராங்கனை அனாஹத் சிங், மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ஜப்பானின் உலகின் 6-வது நிலை வீராங்கனையான சடோமி வதனாபேயை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்த மைல்கல்லை எட்டிய இளம் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இப்போட்டியின் தொடக்கத்தில் அனாஹத் சிங் 0-2 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தார். ஆனால், அதன்பின்னர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், அடுத்த மூன்று ஆட்டங்களையும் தொடர்ந்து கைப்பற்றி அசத்தினார். இறுதியில் 9-11, 11-13, 12-10, 11-6, 11-3 என்ற செட் கணக்கில் வென்று, தனது சர்வதேச வாழ்க்கையின் மிக முக்கியமான வெற்றியைப் பதிவு செய்தார்.

போட்டியின் இரண்டாவது ஆட்டத்தின் போது, பந்தைத் தட்டிவிட முயன்ற அனாஹத் எதிர்வீராங்கனையோடு மோதினார். இதில் அவரது தலையில் பலத்த அடிபட்டதால் போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்துப் பேசிய அனாஹத் சிங், "மோதலின் போது தவறுதலாக என் நாக்கைக் கடித்துக் கொண்டதால் இரத்தம் வந்தது, பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை" என்று தெளிவுபடுத்தினார்.

போட்டிக்குப் பின் பேசிய அனாஹத், "கடந்த முறை நான் விளையாடிய போது 2-0 என முன்னிலையில் இருந்து ஆட்டத்தை இழந்தேன். இம்முறை அது அப்படியே தலைகீழாக மாறியுள்ளது. இறுதிப்போட்டியில் உலகின் முதல் நிலை வீராங்கனையுடன் விளையாட நேர்ந்தால், அது கடினமாக இருக்கும். அவருடன் ஏற்கனவே பலமுறை விளையாடியுள்ளேன், களமிறங்கி எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த ஆவலோடு காத்திருக்கிறேன்" என்று தெரிவித்தார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில், ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற இந்திய வீரர் அபய் சிங், பாகிஸ்தானின் முகமது இர்பானை 3-0 என்ற நேர் செட்களில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார். இதன் மூலம் இந்தியாவிற்கு குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கத்தை அவர் உறுதி செய்துள்ளார்.

35 நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்த அரையிறுதிப் போட்டியில், ஆரம்பம் முதலே அபய் சிங் முழு ஆதிக்கம் செலுத்தினார். முதல் கேமில் 6-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற அவர், ஆட்டத்தை எளிதாகத் தன்வசப்படுத்தினார். இரண்டாவது கேமில் பாகிஸ்தான் வீரர் ஓரளவிற்குப் போராடினாலும், அபய் சிங் பதற்றமின்றி விளையாடி 2-0 என முன்னிலை பெற்றார். மூன்றாவது கேமிலும் அதே ஆதிக்கத்தைத் தொடர்ந்த அவர் வெற்றியைத் தன்வசமாக்கினார்.

வெற்றி குறித்துப் பேசிய அபய் சிங், "இது எளிதான போட்டியாக இருக்கவில்லை. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் எந்த ஒரு ஆட்டமும் எளிதாக அமையாது. இந்தியா-பாகிஸ்தான் மோதல் ரசிகர்களுக்கு மிகுந்த சுவாரஸ்யத்தை அளிக்கலாம். ஆனால் எங்களைப் பொறுத்தவரை இது மற்றொரு போட்டி, எதிரில் இருப்பவர் மற்றொரு வீரர் அவ்வளவுதான். எங்களுக்காகப் பயிற்சியாளர்கள் மற்றும் குழுவினர் கடுமையாக உழைத்துள்ளனர், அவர்களுக்கு நியாயம் சேர்க்கும் வகையில் விளையாட வேண்டியது எங்களது கடமை" என்று கூறினார்.