📅 Tuesday, 06 October 2026 IST | புரட்டாசி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 06, 2026 02:03 AM

95 வயதில் படம் இயக்கி சாதனை படைத்தவர்: சிங்கீதம் சீனிவாச ராவ் உடல் இன்று மாலை தகனம்

95 வயதில் படம் இயக்கி சாதனை படைத்தவர்: சிங்கீதம் சீனிவாச ராவ் உடல் இன்று மாலை தகனம்

95 வயதில் படம் இயக்கி சாதனை படைத்தவர்: சிங்கீதம் சீனிவாச ராவ் உடல் இன்று மாலை தகனம்

சென்னை: இந்திய திரையுலகில் பல்வேறு சாதனைகள் படைத்த சீனியர் இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் (95), உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக நேற்றிரவு சென்னையில் காலமானார். அவரது உடலுக்கு கமல்ஹாசன் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார். கடந்த 1931 செப்டம்பர் 21ம் தேதி ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்திலுள்ள உதயகிரியில் பிறந்தவர், சிங்கீதம் சீனிவாச ராவ். சென்னை பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் பட்டம் பெற்றார். இயக்குனர் கே.வி.ரெட்டியிடம் ‘மாயாபஜார்’ (1957) உள்பட சில படங்களில் இணை இயக்குனராக பணியாற்றினார். 1972ல் ‘நீதி நிஜாயிதி’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து 1974ல் ராஜாஜி எழுதிய ‘திக்கற்ற பார்வதி’ என்ற தமிழ் படத்தை இயக்கினார். இதையடுத்து மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 60 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார்.

தமிழில் கமல்ஹாசன் நடித்த ‘ராஜபார்வை’, ‘பேசும் படம்’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘காதலா காதலா’, ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ ஆகிய படங்களையும் மற்றும் ‘மகளிர் மட்டும்’, ‘சின்ன வாத்தியார்’, ‘லிட்டில் ஜான்’ ஆகிய படங்களையும் மற்றும் ‘சன் ஆஃப் அலாவுதீன்’, ‘கடோத்கஜ்’ ஆகிய அனிமேஷன் படங்களையும் சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கியுள்ளார். 2013ல் வெளியான ‘வெல்கம் ஒபாமா’ என்ற படத்தை இயக்கிய அவர், பிறகு வயது முதிர்வு காரணமாக சினிமாவில் இருந்து விலகினார். ஆனால், கலை மீது கொண்ட பேரார்வம் காரணமாக, 2022ல் ‘பிரதிபிம்பலு’ என்ற படத்தை இயக்கிய அவர், தனது 94வது வயதில் ‘சிங் கீதம்’ என்ற இசைக்கு முக்கியத்துவம் கொண்ட படத்தை இயக்கினார். இது அவர் இயக்கிய கடைசி படமாகும். இந்தியாவின் முதல் டைம் டிராவல் படமான ‘ஆதித்யா 369’ என்ற படத்தை இயக்கிய அவர், கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன் தென்னிந்திய திரையுலகிற்கு பரிச்சயமில்லாத காலத்திலேயே அந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கி அளித்தார்.

இயக்குனர் மட்டுமின்றி திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர், இசை அமைப்பாளர், பாடலாசிரியர், நடிகர் என்று பல்வேறு துறைகளில் சாதனை படைத்த சிங்கீதம் சீனிவாச ராவ், திரைத்துறையில் புதுமைகளை புகுத்தியதற்காக ‘திக்கற்ற பார்வதி’, ‘புஷ்பக விமானா’ ஆகிய படங்களுக்கு தேசிய விருதுகள் வென்றார். மேலும் நந்தி விருது, பிலிம்பேர் விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார். 2011ல் பிலிம் பெடரேஷன் ஆஃப் இந்தியா சார்பில் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. வயது மூப்பு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை ஆழ்வார்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிங்கீதம் சீனிவாச ராவ், சிகிச்சை பலன்றி நேற்றிரவு மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இன்று மாலை சென்னையில் சிங்கீதம் சீனிவாச ராவ் உடல் தகனம் செய்யப்படுகிறது.